பக்கம் எண் :

  

கணபதி துணை

பாசவதைப் பரணி

 

 

காப்பு

வெண்பா

 
1.

தேசுவளர் பொம்மைச் சிவஞான தேசிகன்மேற்
பாச வதைப்பரணி பன்னுதற்கு - நேசமிகும்
அம்பவளச் செஞ்சடிலத் தைந்துகரத் தெந்தையருட்
கம்பவளத் தும்பிமுகன் காப்பு.

 
 

1. கடவுள் வாழ்த்து

நிட்கள சிவம்

தாழிசை

 

2.

திருமருவு மருமன்முத லெவருந் தோன்றத்
      திருவிளையாட் டொருதனியே செய்து மாற்றிப்
பொருண்மருவு மருமறையு மறையொ ணாத
      பூரணதற் பதப்பொருளைப் போற்றல் செய்வாம்.

(1)
   

3.

மயல்புரியும் பெரும்பிறவிப் பௌவம் வற்ற
      வற்றாத பேரின்ப வாரி பொங்கச்
செயல்புரியுஞ் சிவஞான தேசி கன்பூஞ்
      சேவடிசூட் டும்பனுவல் சிறக்க வென்றே.

(2)

குறிப்புரை

1. பொம்மை - பொம்மையபாளையம் ; இவ்வூர் விழுப்புரம் தாலூகாவில் உள்ளது. பன்னுதற்கு - ஆராய்ந்து சொல்லுதற்கு. கம்பம் - கட்டுத்தறி.

பி - ம். ‘தேசிகர்மேல்’

‘2. மருமன் - மார்பை உடையவன்.

3. பனுவல் - நூல்.