பக்கம் எண் :

48 பாசவதைப் பரணி

283.

ஒன்றி நல்ல வுரையென் றுரைப்பவும்
      ஊம னாவ னுடம்பெங்கும் வாயதாய்
அன்றி வேறுங் கடன்கொடு வீணிருந்
      தளப்ப ளப்பனோ ராயிர கோடியே.

(16)
   

284.

ஏற்ற வர்க்கொன் றிடுகின்ற காலையின்
      இரண்டு கையு மிழந்தவ னாவனே
மாற்ற லர்க்கு நிதியிடு காலையின்
      வாண னாண்மலி கையின னாவனே.

(17)
  

285.

ஈசர் வாழ்பதி யேத்தருந் தீர்த்தங்கள்
      ஏகு தற்கிரு கான்முட மாவனே
நீசர் வாழ்பதி நெட்டிடை நீந்தியே
      நெடிது செல்ல நெடுங்கால னாவனே.

(18)
   

286.

அல்ல லாய வறுமையு மாங்கதை
      அகற்ற வெண்ணி யலைந்தலைந் தேதினம்
செல்லு மாய முயற்சி யிடும்பையும்
      சிறந்த வொன்றாத் தெரிந்து திரிவனே.

(19)
   

287.

உந்து தேரி னுருளுங்கூத் தாட்டவை
      உறுங்கு ழாத்தொடு சாயையு மோடுநீர்
வந்து தோன்றுங் குமிழியும் போற்கெடும்
      மாய வாழ்வை நிலையாய் மதிப்பனே.

(20)

283. அளப்பன் - பலமுறை சொல்வான் ;  “அளந்தென் றலையி லெழுத்தெனுங் கூழை யரும்பொருளே” சங்கர நயினார் கோயிலந்தாதி, 9.

284. நாண் - நாணுகின்ற. “எவ்வத் தேற்பவர்க் கீயக்கை யில்லனே” அஞ்ஞவதைப்

285. நெட்டிடை - நீண்ட இடம்.

287. தேரினுருள் :  “சகடக்கால் போல வரும்” (நாலடி. ) கூத்தாட்டவை உறுங்குழாம் :  “கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம், போக்கு மதுலிளிந் தற்று” (குறள். ) நீர்க்குமிழி :  “நீரிற் குமிழி யிளமை” (நீதிநெறி விளக்கம். ) “சாயை போலுஞ் சகட்டுருள் போலுமா, மாய வாழ்க்கை நிலையாய் மதிக்குமே” அஞ்ஞவதைப்.