முதல் நூல்களும், அவற்றின் வழிநூல் எனப்பட்ட மாபுராணம் பூத புராணம் இசைநூலாகிய இசைநுணுக்கம் முதலாய நூல்களும் என இந்நூலுக்கு முன் உளவாகிய தலைச்சங்கத்து நூல் எல்லாம் கொள்ளப்படும். மாபுராணம் முதலாயின தலைச்சங்கத்தே தோன்றினும் அவை எல்லாம் தலையாய அறிவினோராகிய அச்சங்கத்தார்க்கு நூலாகாமல் இடைச்சங்கத்தார் முதலாயினார்க்கே நூலாயின. இனி எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு எண்ணிப் புலம் தொகுத்தோன் என்றமையானும், எழுத்துமுறை காட்டி என்றமையானும், அம்முந்து நூற்கண் உள்ள இசைத்தமிழும் நாடகத்தமிழும் இந்நூற்கும் முதல் நூலாகாமல் இயற்றமிழ் மாத்திரையே முதல் நூலாயிற்று என்பது. இனித் தலைச்சங்கப் புலவருள் தலைவராகிய அகத்தியனார் முதலாயினார் இவ்வாசிரியார்க்கு ஆசிரியரும் ஆசிரியர்க்கு இணையாயினாரும் ஆகலின், அவர் எல்லாம் இவர்க்கு உயர்ந்தோர் என விளக்கற்பொருட்டு உயர்பொருளை உணர்த்தும் பெயர்வழித் தோன்றற்பாலதாய ஒரு வினையொடு சொல்லை ஆகுபெயரான் உயர்பொருள் உணர்த்தும் நிலம் என்னும் பெயர்வழிப் புணர்த்து நிலத்தொடு கண்டு என்றார். இனி இவ்வாசிரியரை ஒப்ப அகத்தியனாரிடத்துக் கற்ற அதங்கோட்டாசிரியரும் பிறரும் தலைச்சங்கத்துப் புலவரே ஆகலின், இவர்க்கு எல்லாரும் உயர்ந்தோர் எனப்படுமாறு என்னை எனின், அதங்கோட்டாசிரியர் முதலாயினார் எழுத்துச் சொற்பொருளைத் தாமாக நாடிச் செந்தமிழியற்கை சிவணாமல் ஓர்ஆசிரியர்பால் கற்றே சிவணினார் ஆகலானும், அகத்தியனார் முதலாயினார் ஓராசிரியர்பால் கல்லாமல் முனைவன் அருள்பெற்று அவன் கண்ட இயற்கை முதல் நூல் கொண்டு தாமாகவே அவற்றை நாடிச் செந்தமிழியற்கை சிவணினார் ஆகலானும், நாடிச் சிவணிய நிலம் என்றது தலைச்சங்கப் புலவருள் செயற்கை முதல்நூலாகிய அகத்தியமும் அதற்கு இணை நூல்களும் இயற்றிய ஆசிரியர் அகத்தியனார் முதலாயினாரையே உணர்த்திற்று என்பது. இனி முந்துநூல் எனற்கு இயற்கை முதல் நூலும் செயற்கை முதல் நூலும் என உரையாமல் அவற்றொடு மாபுராணம் முதலாய |