அவரனையாருமாகிய முக்காலத்துப் புலவரது வழக்கினும் செய்யுளினும் ஒப்ப நிகழ்வனவாகிய எழுத்தும் சொல்லும் பொருளும் எனவே பொருளுணர்த்தும் ஆகலானும் அவ்வாறு உரைத்தல் பொருந்திற்று என்பது. இனி ஆயிடை வழங்கும் தமிழைக் கூறும் உலகம் எனினும் கூறும் என்னும் வினைஅடை நிலத்தை இனம்சுட்டி விலக்கி உயர்ந்தோரை உணர்த்துமாகலான், கூறு நல்லுலகம் என்றது என் கருதியோ எனின், அங்ஙனம் கூறின் உலகம் என்பது உயிரையும் உணர்த்தும் ஆகலானும், உணர்த்தினும் ஏனைய உயிர் தமிழைக் கூறா ஆகலின் கல்லாது வைத்தும் தமிழைக் கூறும் இழிந்த மாக்களை உணர்த்தல்கூடும் ஆகலானும், மக்கள் அல்லாத மாக்கள் நல்லுலகம் அன்மையானும், அவரையும் இனம்சுட்டி விலக்கி உயர்ந்தோரையே உணர்த்தற்பொருட்டு அங்ஙனம் கூறினார் என்பது. இனி நல்லுலகம் எனலே அமையும்; கூறு நல்லுலகம் எனல் என்கருதி எனின், அங்ஙனம் கூறின் அல்லோரது நிலமும் நல்லுலகம் எனப்படும் ஆகலானும், நிலம் தமிழ்கூறாது ஆகலானும், அதனை இனம் சுட்டி விலக்கற்பொருட்டுத் தமிழ்கூறும் எனல் வேண்டும் என்பது. இனி வேங்கடம் என்பது மலையே ஆகலானும், மலையும் மங்கலம் குறிக்கும் ஆகலானும், வேங்கடம் குமரி எனினும் வடக்கு உள்ளது வேங்கடமும் தெற்கு உள்ளது குமரிமலையும் ஆகலான் திசை உய்த்து உணரப்படும் ஆகலானும் வடவேங்கடம் தென்குமரி என்றது மிகையாம் எனின், வேங்கடம் குமரி எனச் சிகண்டி ஆசிரியர் கூறியாங்குச் சொல்லில்வழியே உய்த்துணர்வு வேண்டும் ஆகலானும், வேங்கடம் குமரியை அறிந்தார்க்கு அன்றி ஏனையோர்க்கு அவ்வுய்த்துணர்வு கூடாமையான் அவர் அவை யாண்டு உள என்று ஐயுறுவர் ஆகலானும், அறிந்தாரே அன்றி அறியாதாரும் உணருமாறு வடவேங்கடம் தென்குமரி எனத் திசை விளங்கக் கூறல் மிகையாகாது என்பது. முறைபட என்றமையான் முந்துநூலுள் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழும் ஒன்றனுள் பிறிதொன்று விரவப்பெற்றும், இயற்றமிழுள்ளும் எழுத்து சொல் பொருள் மூன்றும் ஒன்றனுள் |