கூறிய அசரீரியின் பெருமையும் நோக்காமல், களவியலுரைக்கு மாறாகக் கேட்போராவார் இவை ஆய்ந்தோர் இது கேட்டற்கு உரியார் என்பது என்றும், கேட்டல் பாடம் கேட்டல் என்றும், யாப்பாவது இவை ஆய்ந்த பின்னர் இது கேட்கற்பாற்று என்பது என்றும், தம் ஆதீனத்துச் சுவாமிநாததேசிகர்க்கு மாணாக்கர் ஆகலின் வழீஇக் கூறார் என நினைந்து, சங்கரநமச்சிவாயப் புலவர் அறியாது கூறிய உரையினை மெய் எனக் கொண்டு, தாமும் அவ்வாறே கேட்போர்க்கும் யாப்புக்கும் வேறுபொருள் கூறி, நக்கீரனார் உரைத்தாங்கு உரைத்த இளம்பூரணர் முதலாயினாரை மறுத்து இக்கருத்து அறியாத உரையாசிரியரை உள்ளிட்டோர் எல்லாரும் நூல் அரங்கேறும் அவைக்களத்துக் கேட்டாரைக் கேட்போர் என்றும், தொகுத்தல் முதலாய வழியின் வகையினை யாப்பு என்றும் கூறினார் என்றும், ஆக்கியோன் பெயர் நுதலிய பொருள் என்பனபோல இறந்தகாலத் தால் கூறாது கேட்போர் என எதிர்காலத்தால் கூறியதே அஃது உரை அன்மைக்குச் சான்றாம் என்றும் காலம் களத்துள் அடங்குதலின் வேறுகூற வேண்டா என்றும், ஆக்கியோன் பெயர் முதலாயின போல நூல்வழங்கும் காலத்து நிகழ்வதன்று ஆகலின் அவற்றோடு ஒருங்கு வைத்து எண்ணல் பொருந்தா என்றும், கேட்டற்கு உரிய அதிகாரிகளாவாரை ஒருதலையாக உணர்த்தல் வேண்டும் என்றும், தொகுத்தல் முதலாயின வழியுள் அடங்கும் என்றும், இயைபும் ஒருதலையான் உணர்த்தற்பாலது என்றும் தாம் கூறியதே வடநூலார்க்கும் உடன்பாடு என்றும், இளம்பூரணர் முதலாயினார் உரை போலி உரை என்றும் தம் மனம் சென்றவாற்றில் தாமும்சென்றுரைத்தார். அவர் உரையினைக் கற்ற ஈழத்தார் சிலர் நக்கீரனார் புலமை நிரம்பா முன்னர்க் களவியல் பொருள் கண்டார் என்றும் அதனால் அவ் வுரையினும் வழுவுள என்றும் பின்னரே ஆலவாய்ப் பெருமானடிகள் அருள் பெற்று அகத்தியனார்மருங்கு தமிழ் கற்றுப் புலமை நிரம்பினார் என்றும் அது நோக்கியே அகத்தியனார் வரத்தில் தோன்றிய சிவஞான முனிவர் நக்கீரனார் உரைக்கும் குற்றம் கூறினார் என்றும் தாமும் நூலெனச் சில எழுதி அவற்றுள் உரைப்பாராயினர். ஈதென்னை பாவம்; புலமை நிரம்பாமுன்னர் உரை செய்தாராயின் குமாரதெய்வம் கேட்டுக் குற்றமின்று எனக் கொண்டது என்னை? இங்ஙனம் கூறத் துணிந்தார் பிறர் சிலர்போலக் களவியலுரை கண்டார் நக்கீரர் அல்லர் எனக் கூறினும் ஒருவகையில் கலைமலைவு என்னும் குற்றமாயினும் நீங்குமன்றே. இவ்வாறு சொல்வாரது கூற்று |