அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடுவதாகிய கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மையினும் சுடும் கொடுங்கடுங்கூற்று அன்றோ! இது நிற்க. இனிக் கேட்போர்க்கும் யாப்புக்கும் வேறுபொருள் கூறினார் சங்கரநமச்சிவயாப் புலவர் அல்லர் என்றும், சிவஞான முனிவரே தம் கொள்கையை அப்புலவர் செய்த நன்னூல் விருத்தியுள் புகுத்து எழுதித் திருத்தினார் என்றும் பிறர் கூறுப. பிறன் ஒருவன் செய்த நூல் உரைகளை அவனையின்றி ஒருவன் திருத்துமேல் உலகம் பழிக்கும் ஆகலின் புலவர் காலத்தின் பிற்காலத்தினராகிய முனிவர் திருத்தார். தம் ஆதீனத்துப் புலவர் என்னும் இயைபு பற்றித் திருத்தினாராயின் தம் கொள்கைப்படி எல்லாம் திருத்தி எழுதல் வேண்டும்; அவ்வாறின்றி அவர் கொள்கைக்கு மாறாயின பல அவ்விருத்தியில் உள்ளன ஆகலின் அதுவும் பொருந்தாது. என்னை? அவர் இலக்கண விளக்கச் சூறாவளியின்கண் நல் அற்று எனக் கொள்ளுதலே நன்னூலார் கருத்து என்றும், வருதற்கும் உரியன் என்பது எச்ச உம்மையே அன்றி எதிர்மறை உம்மையாகாது என மறுக்க என்றும் பிறவும் உரைத்தார். அவ்வுரைக்கு மாறாக நன்னூல் விருத்தியுள் அல் அற்று எனப் பிரித்து இருசாரியை எனக் கோடலும், வருதற்கும் உரியான் என்புழி அஃது எதிர்மறை உம்மை எனக் கூறலும் பிறவும் பல காணப்படலான் என்பது. அல்லதூஉம் நன்னூல் விருத்தியுள் எழுதுவோரான் ஓர்ந்த வழுக்களைத் திருத்தினாரே அன்றி, புலவரது கொள்கையைத் திருத்தினார் என்பது பெறப்படாமையானும், சில திருத்தாது சில திருத்தினார் எனின், முனிவர் திருத்தின இவை திருத்தாதன இவை என யாண்டும் குறியாமையானும், நன்னூல் விருத்தியில் உள்ளவற்றைப் புலவரது கொள்கை எனவே கொண்டு அவற்றை முனிவர் தமது பாயிரவிருத்தியுள் கூறினார் என உரைத்தாம். அஃது எவ்வாறாயினும் ஆகுக. அவர் உரைத்தன பொருந்தாமை கூறுதும். இனிக் கேட்போர் என்பது கற்போராகிய பாடம் கேட்போர் எனலும் யாப்பும் என்பது இவை ஆய்ந்தபின்னர் இது கேட்கற்பாற்று எனலும் பொருந்தா; என்னை? கொள்வோன் தன்மை எனவும், கோடல் மரபு எனவும், கொள்வோன் கொள்வகை எனவும், ஆசான் உரைத்தவை அமைவரக் கொளினும் எனவும், பிற இடத்தெல்லாம் கற்போனைக் கொள்வோன் என்றும் கற்றலைக் கோடல் என்றும் கூறினாரே அன்றிக் கேட்போன் என்றும் கேட்டல் என்றும் கூறாமையானும், வழக்கறிதலும், பாடம் போற்றலும், கேட்டவை நினைத்தலும், |