ஆசான் சார்ந்து அவை அமைவரக் கேட்டலும், அம்மாண்புடையோர் தம்மொடு பயிறலும், வினாதல் வினாயவை விடுத்தல் முதலாய பிறவும் கூடியவழியே கற்றலாவதன்றி, அவற்றுள் கேட்டல் மாத்திரம் கற்றல் எனப் படாமையானும், பாடம் கேட்டல் கற்றலின் ஓர் பகுதியே ஆகலின், கற்றலுள் கேட்டல் அடங்குமன்றிக் கேட்டலுள் கற்றல் அடங்காமையானும், கேட்டல் கற்றலின் ஓர்பகுதியே ஆயினும், அது கற்றல் எனப் பெயர்பெறாமையும் கல்லாதார்க்கும் உரித்தாகலும் 1கற்றில னாயினுங் கேட்க எனத் தேவர் கூறுமாற்றானும், கேள்வியாவது கற்றறிந்தார் கூறக்கேட்டல் எனவும், அது கற்றவழி அதனினாய அறிவை வலியுறுத்தும் எனவும், கல்லாதவழியும் அதனை உண்டாக்கும் எனவும் பரிமேலழகர் கூறுமாற்றானும் அறியக்கிடந்த லானும், ஒருகுறி கேட்போன் இருகால் கேட்பின் முக்கால் கேட்பின் என்ற இடத்துக் கற்றலின் பொது இயல்பு கூறாமல், அதனது பகுதியாகிய கேட்டல் இயல்பையே கூறலான் அதுகொண்டு கற்போர் எனல் பொருந்தாமையானும், கேட்டல் கற்றலின் ஓர் பகுதியாகலின் கற்றல் எனப் பொருள் உரைத்தலும் அமையும் எனின், ஈவோன் தன்மை கொள்வோன் தன்மை என்றாற்போலக் கேட்போன் தன்மை என ஒருமையால் கூறல்வேண்டும்; அவ்வாறு கூறாது கேட்போரை வாய்ப்பக் காட்டல் எனப் பன்மை கூறியதனானே அது பொருளன்று எனல் விளங்கும் ஆகலானும், நூல்பெயர் இது நூல்நுதலிய பொருள் இது நூல் பயன் இது முதல் நூல் இஃது எல்லை இது நூல் செய்தான் பெயர் இது என்று ஏனைய ஆறும் பெயரறியக் கூறும் சிறப்புப் பாயிரத்து, நூல் கேட்டார்பெயர் இது என்றும் நூல் யாப்பின் பெயர் இது என்றும் பெயர்கூறலே முறையன்றி, பாடம் கேட்டற்கு உரியார் இவர் என ஒருவரைச் சுட்டாது பொதுவாகக் கூறும் மாணாக்கர் இயல்பையும் அவரது செய்கை அறிவாகிய யாப்பையும் கூறுதற்கு ஓர் இயைபும் இன்மையானும், இயைபு இன்றிக் கூறலும் அமையும் எனின், மாணாக்கர் இயல்பும் யாப்பும் என்று கூறிய அவை கொள்வோன் தன்மையும் கோடல் மரபுமாகிய பொதுப்பாயிரத்துள் பெறப்பட்டமையான் ஈண்டும் கூறின் கூறியது கூறலாம் ஆகலானும், அற்றன்று; முன்னர்க் கூறியது மாணாக்கரது பொது இயல்பாம்; ஈண்டுக் கூறியது சிறப்பியல்பாம் என்றாரால் எனின், அவ்வாறே
1திருக்குறள் 414. |