பக்கம் எண் :

262பாயிர விருத்தி

ஆசிரியனுக்கும் ஆண்டுக் கூறியது பொதுஇயல்பு எனப்படும் ஆகலின் ஈண்டுச் சிறப்பியல்பு கூறாமை குன்றக் கூறலாம் ஆகலானும் என்பது.

இனி மாணாக்கரது தன்மை பொதுப்பாயிரத்துள் பெறப்படினும் அவர் கூறிய யாப்பதனுள் பெறப்படாமையான் ஈண்டுக் கூறல் பொருந்துமே எனின், கோடல் மரபாகிய பொதுப்பாயிரத்துள் சொல்லிய பொருண்மை சொல்லியாங்கு உணர்தலும் சொல்லிய பொருளொடு சூழ்ந்து நன்கு உணர்தலும் உடையராகி நடை அறிந்து இயலுநர் நன்மாணாக்கர் என்ப என்றும், ஈதல் இயற்கையாகிய பொதுப்பாயிரத்துள் கொள்வோன் உணர்வகை அறிந்து அவன் கொள்வரக் கொடுத்தல் மரபு எனக் கூறினர் புலவர் என்றும் கூறலானே, இவை ஆய்ந்தபின்னர் இது கேட்கற்பாற்று என்னும் யாப்பினைப் பயப்பதாகிய செயற்கை அறிவு இன்றேல் சொல்லிய பொருண்மை சொல்லியாங்கு உணரான் எனவும், ஊழான் எய்தும் இயற்கை அறிவு இன்றேல் சொல்லியபொருளொடு சூழ்ந்து நன்கு உணரான் எனவும், மாணாக்கனது தன்மை அறிந்து அவன் அறிவுக்குத்தகக் கற்பித்தல் வேண்டும் என்பது பெறப்படலின் அஃது அவர் கூறிய யாப்பின் பொருளாகவே முடிதலானும், அதனை ஈண்டும் கூறில் குற்றமே ஆகலானும், அவர்தாமே ஒரு சாரார் யாப்பாகிய ஆனந்தரியப்பொருள் நூலைப் பயப்பித்தல் காரணமாய்க் கேட்போரை விசேடித்து நிற்றலின், வேறு கூறவேண்டா என்னும் கருத்தானே ஆனந்தரிய நீக்கிச் சம்பந்தம் ஒன்றுகூட்டி நான்கு என்பாராயினார் எனவும், சம்பந்தம் என்பதூஉம் யாப்பு என்னும் பொதுச் சொல்லால் கொள்ளப்படும் எனவும், ஒருதலைத் துணிவின்றிப் பலதிறப்பட உரைத்தார் ஆகலானும், துணிவு இன்றேல் அஃது இலக்கணம் ஆகாமையானும், அவர் கூறியவாறு கேட்போரும் யாப்பும் வேறுபாடுடைய இருபொருள் ஆகாது, வேறுபாடு இல்லாத விசேடண விசேடியமாகிய ஒரு பொருளாகவே முடிதலின், அவற்றை இரண்டாக எண்ணல் பொருந்தாமையானும் அங்ஙனம் உரைத்தலும் அமையாது என்பது.

இனி அவர் காலத்து இயல்பு உணராமையின் கேட்போர் என எதிர்காலத்தால் கூறியதனானே அவைக்களத்துக் கேட்டார் என உரைத்தல் பொருந்தாது எனவும் பிறவும் உரைத்தார். அவர் கூற்றுப் பொருந்தாமை கூறுதும்.