காலம் என்பது திக்கைப்போல ஒன்றாய் வியாபகமாய் நித்தமாய் இருக்கும் பொருளே ஆயினும் அத்திக்கினுள் பட்ட பொருள் ஓர் எல்லையைக் குறித்த இடத்து எவ்வாறு கிழக்கு முதலாய வழக்கிற்கு ஏதுவாயிற்றோ அவ்வாறே காலத்துள்பட்ட பொருளும் ஓர் எல்லையைக் குறித்த இடத்து இறப்பு முதலாய வழக்கிற்கு ஏதுவாகும். என்னை? வேங்கடம் குமரிமலையை நோக்க வடக்காயினும் அதுவே இமயத்தை நோக்கத் தெற்கு ஆயினாற்போல, புதனது பிறப்பு சந்திரனை நோக்க எதிர்காலம் எனப்படினும், பாண்யரை நோக்க இறந்தகாலம் எனப் படலான் என்பது. இவ்வாற்றான் யாதானும் ஒரு பொருளது தொழில் எப்பொருளை எல்லையாகக் கொள்ளுமோ அப்பொருளுக்கு முன் உளதாயின் இறந்த காலத்தானும், பின் உளதாயின் எதிர்காலத்தானும், உடன் உளதாயின் நிகழ்காலத்தானும் கூறல் மரபு ஆயிற்று. இம்முறையானே ஆக்கலும் நுதலும் கேட்டலும் ஆகிய அத்தொழில்கள் எப்பொருளை எல்லையாக உடைய என ஆராயின் அவற்றை இன்ன காலத்தால் சொல்லல் மரபு என்பதூஉம் இன்ன காலத்தால் சொல்லல் வழு என்பதூஉம் விளங்கும். இனி அத்தொழில்கட்கு எல்லை யாதோ எனின், எண் பொருளும் காட்டல் பாயிரத்து இயல்பே என்று ஆணை கூறிய முதல் நூல் ஆசிரியன் காலமும், அவ்ஆணையால் கூறும் பாயிரத்தை உறுப்பாகப் பெறும் நூலாசிரியன் காலமும், அப்பாயிரத்தை உடைய நூலின் காலமும் அப்பாயிரத்தின் காலமும் என நான்கனுள் ஒன்றாதல் வேண்டும்; பிறிதொன்று எல்லையாயின் இயைபின்மையால் பொருந்தாது. அவற்றுள் பாயிரத்து இயல்பினை விதித்த முதல் நூல் ஆசிரியன் காலம் எனக் கொள்ளின், அவ்வாசிரியற்கு முன்னர்க் காலத்து ஆக்கியோன் பெயரையும், முன்னர்காலத்து நுதலிய பொருளையும், பின்னர்க் காலத்துக் கேட்போரையும் குறிக்கும் அன்றி, நூலினை மூன்று காலத்தினுள் ஆக்கும் ஆசிரியரையும், மூன்று காலத்தினும் நுதலும் பொருளையும், மூன்று காலத்தினும் அவற்றைக் கேட்போரையும் ஒப்ப உணர்த்தாமையான், அஃது எல்லை ஆகாமை அறிதும்; இனி அப்பாயிரத்தை உறுப்பு எனப்பெறும் நூலாசிரியனது காலம் எனக் கொள்ளின், ஆக்கியோன் பெயரும் நுதலிய பொருளும் அவ்வாசிரியனை ஆக்கியோனையாயினும், நூலினை அவ்வாசிரியற்கு முற்காலத்து ஆக்கியோனையாயினும், அவனை நுதலிய |