தன்மையுள் இயைபும் அடங்கலின் அதனையே யாப்பு எனக் கூறல் பயனின்மையாம் ஆகலானும், வடநூல் பொது எனவும் சிறப்பு எனவும் பாகுபாடு செய்யாது தன்னைப் பிறன்போல் வைத்து நூல்செய்தானே பாயிரம் கூறலும் அமையும் எனக் கொள்ளும் ஆகலின், அவ்வடநூல் உடன்பாட்டைத் தோன்றா தோற்றித் துறை பல முடிப்பினும் தான் தற்புகழ்தல் தகுதி அன்றே என்னும் கொள்கையை உடைய தமிழ்நூலுக்கு மேற்கோள் காட்டல் பொருந்தாமையானும், அவ்வடநூலுள்ளும் மகாகவியாகிய காளிதாசன் ‘ஆபரிதோடாத் சேதகா’ என்னும் சுலோகத்துள் இந்நூலைக் கற்றோர் கேட்டுக் களிப்புறும் அளவும் இதனை இயற்றிய என் அறிவைக் குற்றமற்றதாக யான் நினைக்கவில்லை என்றும், என்னெனின் முறையில் கற்பிக்கப் பெற்றார்க்கு அறிவு வலி உடைத்தாயினும் அவ்வறிவு குற்றமற்றது குற்றமுடையது எனத் தன்னை அறிதற்குப் பிரமாணமாகாமையான் என்றும் பொருள்படக் கூறினான் ஆகலின் வடநூலாரும் அவைக்களத்துக் கேட்டாரைக் கூறலை மறார் என்பது விளங்கலானும், சிவஞானமுனிவர் உரைத்தன முற்றும் பொருந்தாமை உணரப்படும் என்பது. இதுகாறும் உரைத்தவற்றுள்ளும் இனி உரைப்பவற்றுள்ளும் பன்முறை வரலின் பல்காமைப்பொருட்டுச் சொற்சுருங்கல் கருதி என்பது என்று முடிப்பினும், என்பது கடாவிற்கு விடை என்றாயினும் என்பது மறுதலைக் கடாவிற்கு மாற்றம் என்றாயினும் என்பது விடை என்றாயினும் பொருள் நோக்கி முடித்துக் கொள்க. சோழவந்தானூர் அரசஞ் சண்முகன் உரைத்த சிறப்புப் பாயிரவிருத்தி முடிந்தது ஆசிரியர் தொல்காப்பியனார் திருவடி வாழ்க. |