பதிப்புரை தொல்காப்பியம் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பரிசு என்று கூறலாம். பழந்தமிழர் வாழ்ந்த நெறிமுறைகளைக் கூறி நமக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறது. மொழியின் இலக்கண வரம்புகளைக் கட்டிக் காப்பற்றித் தமிழ் மொழியின் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துமாறு செய்கிறது. தொல்காப்பியம் வழங்கி வரும் நன்மைகள் பலப்பல. அத்தகைய சிறந்த நூலின் சிறப்பினை விளக்கி அறிஞர்கள் எழுதிய நூல்களும் பலப்பல. அவற்றுள் நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழறிஞர் அரசஞ் சண்முகனார் எழுதிய இந்நூல் தமிழ் விருந்து படைக்கிறது. விருந்துண்ண வாரீர் தமிழர்களே! இந்நூல் வெளிவருவதற்கு உறுதுணையாகவும் ஆர்வம் ஊட்டிய அண்ணலாகவும் இருந்துவரும் அரும்புலவர் ச. சீனிவாசனார் அவர்கள் தொண்டிற்கு உள்ளத்தால் நன்றி கூறி வணங்குகிறோம். மேலும் புலவர் பெருந்தகை பூ. ஜெயராமன் அவர்கள் இந்நூலினைச் சந்தி பிரித்து, படிப்பவர்களுக்கு எளிமையாக்கித் தந்த பெரும்பணியினை மிகுந்த பொறுமையுடன் செய்துள்ளார்கள். அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. 1905 ஆம் ஆண்டு வெளிவந்த இந்நூலின் மூலப்படியைத் தம் உயிர்போலப் பாதுகாத்துவரும் தமிழறிஞர், பெரு மதிப்பிற்குரிய முனைவர் கி.முப்பால்மணி அவர்கள் அருள் உள்ளத்தோடு எங்களுக்கு அப்படியை வழங்கி நூல் வடிவாக்க உதவி புரிந்தார். அவர்களுக்கு நாங்கள் மிகுந்த நன்றிக்கடன் பட்டுள்ளோம் பதிப்பாளர் |