பக்கம் எண் :

30பாயிர விருத்தி

நற்புலமை யோடு நடுவு நிலைமையே
கற்புடைய வெட்டுறுப்புக் காண்.’’

எனக் கூறுமாற்றானும் உணரப்படும்.

இனிக் குடிப்பிறப்பு முதலாகக் கூறலே முறையாயினும், 1படைகுடி கூழமைச்சு நட்பர ணாறும் என்புழிப்போல யாப்புப் பற்றி வெண்பாவின்கண் அவை முறையின்றி நின்றன.

இனி ஆத்திரையன் பாயிரத்துள் ‘யாவது மஃகா’ என்பது அன்புடன் இயைதலே அன்றி, வெஃகா உள்ளத்துடனும் இயையும்.

இனி வன்பு என்பது

2“அழுக்கற் றகன்றாரு மில்லையஃ தில்லார்
  பெருக்கத்திற் றீர்ந்தாரு மில்.’’

என்றாராகலின் பெருக்கத்தை அஃகாமைச் செய்யும் வலியுடைத்தாய அழுக்காறிலாமையை உணர்த்திற்று. வன்பு, வலி என்பன ஒருபொருள.

இனி ‘வெஃகா வுள்ளம்’ என்பது.

3“அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
  வேண்டும் பிறன்கைப் பொருள்.’’

என்றார் ஆகலின் அத்தன்மைத்தாய அவாவின்மையை.

இனி, ‘யாவது மஃகாத அன்பு’ எனக் கொண்டால் என்னை எனின், அது பொருந்தாது. என்னை? அன்பு முதலாயின முதலுறுப்பாகிய குடிப்பிறப்பின் பொது இயல்பின்கண் அடங்குதலானும், பிற உறுப்பினுள் அழுக்காறிலாமை கூறப்படாமையானும், அழுக்காறிலாமை இன்றேல் ஏனைய உறுப்பு எல்லாம் ஒருங்கிருப்பினும் பயனின்மையானும், பிற சான்றோரும் அன்புகூறாமல் அழுக்காறு இலாமையே கூறினார் ஆகலனும் என்பது


1திருக்குறள் 381.

2திருக்குறள் 170.

3திருக்குறள் 178.