பக்கம் எண் :

32பாயிர விருத்தி

1“நகையீகை யின்சொ லிகழாமை நான்கும்
 வகையென்ப வாய்மைக் குடிக்கு.’’

எனவும்,

2“நலத்தின்க ணாரின்மை தோன்றி னவனைக்
 குலத்தின்க 3ணையப் படல்.’’

எனவும்,

4“நலம்வேண்டி னாணுடைமை வேண்டுங்
                 குலம்வேண்டின்
 வேண்டுக யார்க்கும் பணிவு.’’

எனவும்,

5“இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை யியல்பாகச்
 செப்பமு நாணு மொருங்கு.’’

எனவும் கூறினாராகலின், வறியார் சென்றவழி முகமலரும் நகையும், உள்ளன கொடுக்கும் ஈகையும், இன்சொல் சொல்லுதலும், 6இல்லாரையெல்லாரு மெள்ளுவராயினும் தான் இகழாமையும், குலத்தின்கண் ஐயப்படாமைக்கு ஏதுவாகிக் கொடாமை கடுஞ்சொல் முதலாயவற்றை இன்மையாக்கும் அன்பும், 7அந்தணர் சான்றோரருந்தவத்தோர் தம்முன்னோர் தந்தைதா யென்றிவர் எல்லாரையும் இருக்கையெழல் எதிர்செலவு முதலாயின செய்து பணிவும், கருத்தும் சொல்லும் செயலும் தம்முள் மாறாகாத செம்மையும், இழிந்த கருமம் காரணமாகப் பழிபாவங்களின் மடங்கு நாணமும் என அவ்எட்டென்பது.

அவை ஈகை முதலாக நிற்றலே முறையாயினும் யாப்புப் பற்றிப் பிறழநின்றன. என்னை?


1திருக்குறள் 953

2திருக்குறள் 958

3‘ஐயப்படும் என்பது பரிமேலழகர் கொண்ட பாடம். அது கூடாமை இனி அச்சிடப்படும் திருக்குறள் சண்முகவிருத்தியுள் காண்க.

4திருக்குறள் 960

5திருக்குறள் 951

6திருக்குறள் 752

7புறப்பொருள் வெண்பா மாலை பாடாண்படலம் 33 வது பாட்டு.