156 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
மனைவியர் முதலியோர் காதல் கூறும் பகுதிகளெல்லாம் புறத்திணையின் பாற்படுமென்பது பொருந்தாக் கூற்றாகும். இனி, ‘புறத்தகம்’ என்றொன்றின்மையான், ‘அகப்புறம்’ என்றொன்றமைப்பது தொல்காப்பியர் யாண்டும் கருதாப் புதிய திணையாமாதலானும், அஃதமைவதன்று. இச்சூத்திரத்தில், ‘புறத்திணை’ என்பதை மேற் சூத்திரத்திற் கூறிய அளவளவும் “அகனைந்திணைப்புறம் என மாற்றிப் பொருள்கோடல் வேண்டும். அல்லாக்கால், ‘அகமல்லாப் புறத்திணைக்குரியதனை மயக்கத்திற் கிடமாகத் தொல்காப்பியர் இவ்வகத்திணையியலில் மறந்து கூறினாரென அவருக்கு மற்றொன்று விரித்த குற்றம் சுமத்துவதாக முடியும். ஆதலால் அஃது அவர் கருத்தன்மை அறிக. இனி, இங்குத் தொல்காப்பியர் புறத்திணையையே சுட்டுவதாகக் கொள்ளின், அளவளாவிடத்து அகத்திணையுள்ளும் பெயர் சுட்டல் அமையுமென ஐயமகற்றக் கருதி, அது கூறுமிச்சூத்திரத்தில் தலைமக்கள் சுட்டிப் பெயர் கொளப்பெறுதல் புறத்திணைக்கண் கடியப்படாதென்பதையும் “ஒன்றென முடித்தல், தன்னின முடித்தல்” எனுமுத்திகளால் ஈண்டு உடன் கூறினார் என அமைத்தல் வேண்டும். ஆகவே, அன்பினைந்திணை மருங்கினும் தலைமக்கள் தம்முள் அளவளவுதல் கூறுமிடத்துமட்டும் ஒருவரை ஒருவர் பெயர் சுட்டல் கடியப்படும் என்பதும், அவ்வாறு அளவுதலின் புறத்து ஐந்தகத்திணைகளிலும், அவற்றின் புறம்பே கைக்கிளை பெருந்திணை என்னும் அகப்பகுதிகளிலும், புறத்திணையில் மக்களின் தூய காதல் கண்ணிய பாடாண் பகுதிக்கண்ணும், அவ்வாறு பெயர் சுட்டுதல் கடிதலில்லையென்பதும், இதுவே அவர்காலப் புலனெறி வழக்காமென்பதும், இவ்விரு சூத்திரங்களாலும் அம்மரபுகளைத் தொல்காப்பியர் விளங்க வைத்தார் என்பது தேற்றம். அகத்திணையியற் புத்துரை முற்றிற்று. |