தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 155 |
என்னும் பழைய வெண்பாவிலும் அகத்துறையில் தலைவன் பெயர்சுட்டுதல் காண்க. இவை கைக்கிளைப் பாக்களாதலிற் பெயர் கூறப்பெற்றது என்பார்க்கு, பெண்பாற் கைக்கிளை பிற்காலப் பிழை வழக்காவதன்றிப் பண்டைப் புலவர் கொண்ட ஆன்ற வழக்கன்மையானும், தொல்காப்பியர் கைக்கிளையை ஆடவர்க்கே அமைத்துப் பெண்டிரின் ஒருதலைக்காமம் முதலிய மற்றனைத்தையும் பெருந்திணையிலடக்கி யமைவாராதலானும், இப்பழைய வெண்பாக்கள் அன்பினைந்திணைத் துறையே கூறுவனவாமெனக் காட்டி மறுக்க. மேலும், இதில் “ஐந்திணை மருங்” கென்னாது, “அகத்திணை மருங்கில்” என்றதனால், இந்நூற் பாக்கட்டளைக்குக் கைக்கிளை விலக்கின்மையாலுமவர் கூற்றுப் பொருந்தாதென்க. அகநானூறு கலித்தொகை முதலிய அகத்தொகைச் செய்யுட்களில் யாண்டும் தலைமக்கள் பெயர் கூறப்படாமை கொண்டு, அகத்திணைப் பகுதி கூறும் செய்யுட்களில் இயற்பெயர்சுட்டு யாண்டும் எஞ்ஞான்றும் கடியப்பெடுமெனக் கூறுவாருமுளர். யாரையுங் குறியாமல் அகத்துறைகளின் செவ்வியைப் புனைந்துரைப்பதையே குறிக்கோளாகக் கொண்ட தனிச் செய்யுட் தொகுதிகளில் எவர் பெயரும் சுட்டற்கிடமின்மை வெளிப்படை; அது கொண்டு சிறப்புடையோரின் சீரிய காதல் பாடும் புலவர் தம் செய்யுட்களில் யாண்டும் தலைமக்கள் பெயரே கூறலாகாதென விலக்குதல் அமைவுடைத்தன்று; அவ்விலக்கிற்கு விதியும் வழக்கும் இல்லை. பெயர்கூறும் வழக்குண்மை முன் சூத்திர உரையிற் காட்டியன கண்டுணர்க. இனி, தக்கோர் தலைவராய் அவர் காதற் செவ்வியே பொருளாக வரும் பாட்டெல்லாம் அவர் பெயர் குறிப்பதனால் மட்டும் அகமாகாதென மறுக்குமாறில்லை. புறத்துறைப்பகுதி மிகுதியுமுடைய பட்டினப்பாலை காதல் கண்ணிய முடிவு ஒன்றுகொண்டு அகநூலாகக் கருதப் படுங்கால், காதலொழுக்கமே பொருளாய் வரும் செய்யுளில் காதலர் பெயர் குறிக்கப்படுவதால் மட்டும் அதைப் புறமென விலக்க விதி யாதும் யாண்டும் தொல்காப்பியர் கூறவில்லை. ஆதலால் பெயர்சுட்டுதல் ஒன்றுகொண்டு கோவலன் கண்ணகி, கோவலன் மாதவி, மணிமேகலை- உதயகுமரன், சீதை - இராமன், சீவகன் |