பக்கம் எண் :

154நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

குறிப்பு : “சுட்டி யொருவர் பெயர்கொளப் பெறுதல்” என்னும் எழுவாய் மேற்சூத்திரத்தினின்று தொடர்புபற்றி வருவிக்கப்பட்டது. இனி, ‘அளவுதலையே’ எழுவாயாக்கி, “பெயர்சுட்டி அளவுதல் இல” என முடிப்பினும் அமையும்.

அகனைந்திணையில் தலைமக்கள் தம்முள் இயற்பெயர் சுட்டி அளவளாவல் மரபன்றென முற்சூத்திரத்திற் கூறப்பட்டது. எனவே, அளவளாவல் அல்லாத அன்பினைந்திணை கூறுமிடங்களில் தலைமக்கள் பெயர்கொளப் பெறுதல் கடியப்படுமோ எனும் ஐயம் நீக்கற்கு இச்சூத்திரம் எழுந்தமையால், இது முன்னதற்குப் புறனடையாயிற்று. இவ்வாறு காதலர் தம்முள் அளவளவுதல் ஒழிந்த ஏனை அன்பினைந்திணை அகப்பகுதிகளில் அவர் பெயர் சுட்டப் பெறுதலும், ஒருவர் பெயரை மற்றவர் கூறுதலும் இழுக்கன்று. இவ்வுண்மையை

“அரிமா சுமந்த அமளிமே லானைத்
 திருமா வளவனெனத் தேறேன், - திருமார்பின்
 மானமா லென்றே தொழுதேன், தொழுதகைப்
 போனவா பெய்த வளை”

என்னும் பட்டினப்பாலைத் தலைவனின் இயற்பெயர் சுட்டும் அகத்துறை வெண்பாவும்,

“நெடுவரைச் சந்தன நெஞ்சங் குளிர்ப்பப்
 படுமடும் பாம்பேர் மருங்குல் - இடுகொடி
 ஓடிய மார்பன் உயர்நல் லியக்கோடன்
 சூடிய கண்ணி சுடும்”

என்னும் ஓய்மாநாட்டு நல்லியக்கோடன் இயற்பெயர் சுட்டும் பழைய வெண்பாவும் வலியுறுத்தும். இவ்விரண்டிடத்தும் தலைவி தலைவன்பெயர் கூறுதல் காண்க.

“தூஉஉத் தீம்புகை தொல்விசும்பு போர்த்ததுகொல்?
 பாஅஅய்ப் பகல்செய்வான் பாம்பின்வாய்ப் பட்டான்கொல்?
 மாஅ மிசையான்கொல்? நன்னன் நறுநுதலார்
 மாஅமை யெல்லாம் பசப்பு”