தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 153 |
மாசாத்து வாணிகன் மகனேயாகி வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச் சூழ்கழல் மன்னா! நின்னகர் புகுந்திங் கென்காற் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பால் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி, கண்ணகி என்பது என்பெயரே” எனக் கண்ணகி தென்னன்முன் கூறுதலால் அறிக. இவ்வடிகளில் தலைமக்கள் இருவர் பெயருமே கூறப்பெறுதலும் அறிக. இனி, தமிழகத்தில் செய்யுள் வழக்கேயன்றி உலகியல் வழக்கிலும் இம்மரபுண்மை, பண்டை மரபழித்துப் பெண்டிரை யிழித்துமகிழ் பிறநாகரிகம் புகுந்த பிற்காலத் தமிழகத்திற் போலாது, அடிப்பட்ட பழந்தமிழ் மரபு பல வழுவாமற்பேணும் ஈழத்தில் இற்றை ஞான்றும் காணப்படும். நேரிற் பெயர் சுட்டாமை பெண்டிர்க்குப் போலவே ஆடவர்க்கும் உரித்தாய்க் கணவனும் மனைவி பெயர் சுட்டி அளவா வழக்கும், ஒருதலையாக இருபாலோரும் பன்மைக்குரிய இருபாற் பொதுச் சொற்களால் பேணிப் பேசித் தம்முள் அளவுதலும், தம்முள் அளவளவா இடங்களில் ஒப்ப இருபாலோரும் ஏற்புழி ஒருவர் பெயரை மற்றவர் கூறலும், ஈழத் தமிழருள் இன்றும் வழங்கக் காண்பாம். சிங்களர் முதலிய அந்நாட்டுப் பிறமக்களுள் என்றும் இம்மரபின்மையால், இது தமிழர் ஆண்டுத் தம்மொடு கொடுபோய்க் கையாளும் பழமரபேயாதல் வேண்டும். சூத்திரம் : 54 | | | புறத்திணை மருங்கிற் பொருந்தி னல்லது அகத்திணை மருங்கில் அளவுத லிலவே. |
கருத்து : இது, மேலதற்கோர் புறனடையாய், எய்தாதது எய்துவித்தது. பொருள் : புறத்திணை மருங்கிற் பொருந்தினல்லது = (சுட்டி யொருவர் பெயர்கொளப் பெறுதல்) மேற்சூத்திரத்திற் கூறியாங்குத் தலைமக்கள் தம்முள் அளவளவாப் பிறவிடங்களில் ஐந்திணைப்புறனாய் அமைவதல்லால்; அகத்திணை மருங்கில் அளவுதல் இல = அகவொழுக்கத்தில் அவர் தம்முள் அளவளவலில் இல்லை. |