பக்கம் எண் :

158 

தொல்காப்பியர் - பொருட்படலம்

புறத்திணை யியல்

ஒழுக்கமொன்றே கருதற்குரிய விழுப்பொருளாகக் கொண்டவர் பழையதமிழர். மக்களின் வாழ்க்கைச் செயலெல்லாம் திணையா (ஒழுக்கமா) யடங்கும். எல்லாச் சொற்களுக்கும் அவற்றின் பொருள்பற்றியே திணையும் பாலும் வகுக்கும் தமிழ்மரபு இதற்குச் சான்றுபகரும். ‘உயிரினும் ஓம்பப்படும் ஒழுக்கம்’ பேணி, அதனை ஓம்பற்குரிய மக்கட்டன்மை சுட்டுவனமட்டே உயர்திணையெனவும், ஒழுக்கமே கருதொணாப்பிற எதனையும் குறிக்கும் சொற்களனைத்தும் அல்திணை (திணையல்லாதன) எனவும், தொல்காப்பியர் போன்ற பண்டைத் தமிழ்ப் புலவர் வகுத்த முறை இப்பழைய தமிழ் மரபுபற்றி யெழுந்ததாகும். “தீதொரீஇ நன்றின்பா” லுய்க்கும் அறிவு நெறி கடைப்பிடித்தொழுகாது, உருவத்தால் மக்களே போல்பவராயினும் மேவன செய்து திரியுங் கயவரையும், விரும்பியாங்கொழுகும் நரகரொடு தேவரையும், அறிவற்ற பிற அனைத்தையும் ஒருங்கே அல்திணையாக் கொண்டாண்ட பழந்தமிழ்மரபு உயர்வுள்ளும் தமிழர் ஒழுக்க நிலையையும் விழுப்பநோக்கையும் வலியுறுத்தும். மக்கள் வாழ்வில் தூய கற்புறுகாதல் கண்ணியமனையற வொழுக்கம்பற்றிய அனைத்தும் அகமெனப்பட்டன. பிறர்தொடர் பின்றியமையா இற்புறவாழ்வோ டியைபுடையவெல்லாம் புறமெனப்பட்டன. தனிச் சிறப்புடைய இத்தமிழ்மரபு பேணித் தொல்காப்பியர் தம் நூற்பொருட்பகுதியில், காதல் கண்ணிய அகத்திணையாமவற்றின் பொதுவியல்புகளைத் தொகுத்து அகத்திணை யியல் என்னும் பேரால் முதலிற் கூறினார். அவ்வகவொழுக்கின் சிறப்பியல்களைக் ‘களவு’ ‘கற்பு’ எனுங் கைகோளிரண்டன்கீழ் வகுத்து விரிக்குமுன், பொருளை அகம்புறமென நிறுத்தமுறையானே, பொருளிடையீடாய், ஒருவாறாகத் திணைகளுக்குத் தொடர்புடைய மற்றைப்புறவொழுக்க