பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை159

வியல்களையுஞ் சுட்டவேண்டி அவற்றை இவ்வியலில் விளக்குகின்றார்; ஆதலின், இது புறத்திணையியல் எனும் பெயர்கொண்டது.

காதலறவொழுக்கங்களைத் தொகுத்து ஏழு திணையாகக் கொண்டதற்கேற்ப, மக்களின் புறவொழுக்கங்களையும், ‘மறனுடை மரபின்’ ஏழேயாகக் கொள்ளும் பழைய தமிழ் முறையைத் தழுவி வெட்சி முதலாப் பாடாண் ஈறாப் புறத்திணை ஏழும் அவற்றின் இயல் துறை வகைகளும் இப்புறத்திணை யியலிற் கூறப்படுகின்றன. பழங்காலத்தில் ஆடவர்க்குரிய சிறந்த சால்புகளான ‘பெருமையும் உரனும்’ பெரிதும் மறத்தின் வீறாயமைதலின், புறவொழுக்கமெல்லாம் ‘அமர்கொள் மரபின்’ திணைகளாயின. அவற்றை நிரலே முதலில் அகத்திணை ஒவ்வொன்றற்கும் ஏற்புடைப் புறனாயமையும் திணை வகையும் அதன் பெயரும் குறித்தல், அதையடுத்துடனே அப்புறத்திணையியல்விளக்கல், பிறகு அதன் துறைவகை தொகுத்தல், என முத்திறம்பட முறை பிறழாமல் விளக்குவர் தொல்காப்பியர். அவ்வத்திணை துறைகளின் தொகையெண், முதலிற்றிணைப் பெயரோடேனும், ஈற்றில் துறைவகையோடேனும் கூறப்பெறுகின்றது. எனவே ஒவ்வொரு புறத்திணைக்கும் குறைந்த அளவு மூன்றும், திணைதுறைகளின் சிறப்பியல்புகள் பெருகுமிடத்து மூன்றின் மிக்கும் சூத்திரங்கள் கூறப்படுகின்றன.

புறத்திணை ஏழும் முறையே, வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் எனப் பெயர் பெறும். இவை நிரலே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை, கைக்கிளை என்னும் அகத் திணைகளுக்கு இயலியைபுடைமை கருதி அவ்வவற்றிற்குப் புறமாயமைவனவாய்க் கொள்ளப்பட்டுள. அவ்வமைதி அவ்வத்திணைச் சூத்திரத்தின் கீழ் விளக்கப்படும். அகத்திற்போலப், புறத்தும் திணைகளை அவ்வவ்வொழுக்கத்திற் சூடும்மாலை அல்லது அடையாளப் பூவாற் பெயரிட்டழைப்பது அடிப்பட்ட தமிழ் நூன்மரபாகும். இம் முறையே இவ்வியலில் முதல் மூன்று சூத்திரங்களில் ஆகோளாம் வெட்சித் திணைவகையும், நான்கு, ஐந்துஆம் சூத்திரங்களில் ஆகோளைப் போலவே குறிஞ்சிப் புறனாய்ப் போர்துவக்கும் வெட்சியொழுக்கமாகும் கொடிநிலை; கொற்றவை நிலை என்பனவும் பிறவெட்சித் துறைகளும் கூறப்படுகின்றன. வெட்சி, போர்துவங்குமுன் பகைவர்க்கறிவிப்பதுபோல் அது