பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை169

கொண்டியையுமாமென்பது தோன்றக் ‘களவின்’ எனக் கூறப்பட்டது. நிரைகவரக் கருதிச் சென்றோர் எதிர்பாராத காவலர் எதிர்ப்பிற்கிடைந்து நிரை கவராதேனும் கவர்ந்தாங்கே மீட்க விட்டேனும் வாளா மீளல் ஆகோள் வெட்சியாகாதென்பதையும், மீட்க விடாமல் கவர்ந்து கொணர்ந்த நிரையைத் தம்மை ஏவிய வேந்தர்பால் ஊறின்றி யுய்ப்பது முனைஞர் கடனாதலையும் தெளிக்கவேண்டி ‘ஆதந் தோம்பல் மேவற் றாகும்’ என விளக்கப்பட்டது. இக்கருத்தானே, ‘ஓம்புதலாவது மீளாவல் காத்தல்’ எனவும், ‘போர்க்கு முந்துற நிரை கோடல் சிறந்த’ தெனவும், இச்சூத்திரத்தின் கீழ் உரைக்குறிப்பாய் இளம்பூரணர் கூறுதலும் காண்க. இம் மாற்றருஞ்சால்புடை மரபுகள் போற்றாத பிற்காலத்தில், நிரை மீட்கும் முயற்சியைவெட்சியிலடக்காமல் கரந்தையென வேறு திணையாக்கியும், இவ்வெட்சியை வேந்தன்மேற்றாய் நிறுத்தாமல் ‘தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென்று அன்ன விருவகைத்’ தாக்கியும், தந்நாட்டை விலக்காமல் யாண்டும் பிறர் நிரை கவர்தல் வெட்சியாம் போலவும், முறைபிறழத் துறைகளைக் கூட்டியும் மாற்றியும், முந்துற நிரை கவர்ந்து அமரறிவித்துப் பின் பொருவதே போரறமென்பதை மறந்து போர்த் துவக்கத்தில் நிகழும் ‘கொடிநிலை கொற்றவைநிலை வெறியாட்டு’ அன்ன கடவுட்பராவு நிலைகளை வெட்சிக்கண் போர்த்துறைகளாக எடுத்து நிறுத்தியும், இன்னும் பல்லாற்றானும் பின்னூல்களில் மரபிறந்த மாறுபாடுகள் மலிவவாயின. பன்னிருபடலத்துள் ‘தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென் றன்ன விருவகைத்தே வெட்சி’ எனவும், அதைப் பின்பற்றி ‘வென்றி வேந்தன் பணிப்பவும் பணிப்பின்றியும், சென்றிகன் முனை ஆதந்தன்று’ என வெண்பா மாலையிலும், வெட்சியை இருகூறுபடக் கூறினாராயினும், முன் ‘வருகின்ற வஞ்சி, உழிஞை, தும்பை முதலாயின (படை எடுத்துச் செலவு, எயில்காத்தல், போர்செய்தல் என்பன) அரசர் மேலாய் இயன்று வருதலின், வேந்துறு தொழிலொழித்துத் தன்னுறு தொழிலெனத் தந்நாட்டும் பிறர் நாட்டும் களவில் ஆனிரை கோடலின், இவர் அரசரது ஆணையை நீங்கினா ராவர்; ஆதலால், அவர் அவ்வாறு கூறல் மிகைபடக் கூறலாம்’, என இளம்பூரணரும் பிழைபட்ட பிற்காலக் கொள்கைகளைக் கடிதல் காண்பாம்.

இனி, முடிவேந்த ரல்லார் சிலரைப் புகழ்ந்துவரும் வெட்சிப் பாடாண் புறப்பாட்டுக்களைக் காட்டி, அவை மன்னர் பணிப்பின்றி ஆகோள் தன்னுறு தொழிலாய்க் கொள்வதற்கு