பக்கம் எண் :

168நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

கருத்து : இது வெட்சித்திணையின் இயல் விளக்குகிறது.

பொருள் : வேந்துவிடு முனைஞர் = மன்னரா லேவப் பெற்ற படை மறவர்; களவின் வேற்றுப்புல ஆதந்தோம்பல் = கரவால் பிறர் நிலத்து நிரை கவர்ந்து போந்து புரந்தருதலை; மேவற்றாகும் = (அவ்வெட்சி) விரும்பும் தன்மைத்தாம்.

குறிப்பு : கொண்டபொருட் குறிப்பால் அவாய் நிலையாய் ‘அவ் வெட்சி’ யென்பது கொள்ளப்பட்டது.

இனி, ‘வெட்சி’ மறனுடை மரபில் அமர் துவக்கும் ஒழுக்குமாதலின், போர் விரும்பும் மன்ன ரேவலால் அது நிகழ்தற்பாற்று. பிற நாட்டொடு போர் தொடங்குதல் இறைமை முறையாய் மன்னர் பாலதே யாதலால், இப்போர்த் தொடக்கத்திணை அவராணைவழித்தாதல் ஒருதலை. அன்றியும், அது போர்க்குறி யாதலால், மன்னரேவினும், பொருந ரல்லாப் பிறர் மேற்கொள்ளற்பாற்றன்று. பிறர் நிரைகவர்தல் போர்த்தொடக்கம் குறியாமல் திருட்டாய்க் கருதப் பெறுமாகலின், இத்திணைக்கு மன்னர் பிறரை விலக்கித் தம் படைமறவரையே ஏவற்பாலர். மேலும், முனைஞரும் மன்னரேவலின்றித் தாம் விரும்பியாங்குப் போர் தொடங்கல் கூடாதாகலின், போர்த் தொடக்கமாம் ஆகோளும் வேந்தராணையில்வழி அவர்க் கொவ்வாத் தவறாகும். இத் தமிழ்ப் பேரறம் விளக்க வேண்டி, ஆனிரை கொள்ள ‘வேந்து விட’லும் அவ்வாறு விடப்படுவார்‘முனைஞரே’ யாதலும் வெட்சித் திணைக் கின்றியமையாமை சுட்டி ‘வேந்துவிடு முனைஞர்’ எனக் கூறப்பட்டது.

இன்னும், கவர விரும்பும் பிற நாட்டு நிரையும் போர் நிகழாக் காலத்து மன்னறக் காவல் துன்னித் தன்னிலத் துய்க்கப்பெற்றுழிக் கவரப்படுதல் முறை திறம்பி அற மழிப்பதாமாகலின், போர் துவக்குவோர் தமதல்லாப் பகை நிலத்தில் நிரைகவரற்பாலரெனற்கு ‘வேற்றுப்புல’த்து என விளக்கப்பட்டது. போராகாமல் போர்க்குறி யறிவிப்பாய் நிரைகொள்ளலே இத்திணை யாதலால், பகைப் படையின் எதிர்ப்பும் போரும் வேண்டாது பகைவர் நிலத்து அவரறியாமல் கரவில் கைப்பற்றும் முயற்சியே வெட்சியும், வெளிப்படையாய்ப் பகைவரை அறைகூவி நிரை கவர்தல் தும்பைப்பாற்