பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை167

சுட்டப்பட்டது. எனவே, புறத்திணைகளெல்லாம் முறையே ஒவ்வோர் அகத்திணைக் கியைபுடையவாதலும், அதனால் அகத்திற் போலவே புறத்திலும் திணை ஏழா யமைதலும் மரபென்பதும் வலியுறுத்தப்பட்டது.

இனி, வெட்சி குறிஞ்சிக்குப் புறனாமாறு : காதல் கண்ணிய அனைத்தக வொழுக்கங்களுக்கும் குறிஞ்சி முதலாதல் போல, ‘அமர்கொள்மரபின்’ புறத்திணைகளெல்லாம் வெட்சியைக்கொண்டு துவங்குதலானும், குறிஞ்சியும் வெட்சியும் ஒருங்கே களவில் நிகழ்வ வாதலானும், ஒழுக்க முறையால் வெட்சி குறிஞ்சிக்குப் புறனாயிற்று. இனி, நிரை மேயும் மலைச்சார்பு களவிற் கூடும் குறிஞ்சிக்கும் களவில் ஆதந்தோம்பும் வெட்சிக்கும் சிறந்துரியதாகலும், நள்ளிரா இவ்வீரொழுக்கங்களுக்கும் ஏற்புடைத்தாகலும், இடத்தானும் காலத்தானும் இவற்றிடை ஒருபுடை யியைபுடைமை எய்துவித்தலானும் வெட்சி குறிஞ்சிக்குப் புறனா யமையும்.

இன்னும், மக்களின் அக ஒழுக்கம் ஏழாதல் போல், அவற்றிற்கு இயலியை புடைய அவர்தம் புற வொழுக்கமும் எழுதிணை யென வகைபெற வைப்பதே பழைய மரபாதலின், அகத்திணை யியல்வகைகளை நன்கறிந்தார்க்கன்றி, புறத்திணைகளும் அவற்றின் துறைமுறைகளும் இனிது விளங்கா எனற்கு, ‘அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர் புறத்திணை யிலக்கணந் திறப்படக் கிளப்பின்’ என்றிப் புறத்திணை முதற் சூத்திரத் துவக்கத்திற் கூறப்பட்டது. எனவே, இவ்வாறு அகத்திணை ஏழொடு புறத்திணை யேழும் யாப்புற வுடையதாகக் கொள்ளுவதே அடிப்பட்ட தமிழ்மரபெனத் தெளியவைப்பதால், அத்தொடர்பு தொலைத்துப் புறத்திணைகள் பன்னிரண்டென்னும் பிற்காலக் கொள்கை பழவழக்கொடு முரணு மிழுக்காதல் தேறப்படும்.

வெட்சியின் துறைகள், ‘வேந்து விடு முனைஞ’ ரால் ‘மறனுடை மரபில்’ நிகழ்தலின், போர் பயிலாத நிரைகாக்கும் ஆயரும் அயலாரும் அஞ்சுதல் இயல்பாம். ஆதலான், வெட்சித் துறைகள் ‘உட்குவரத் தோன்றும்’ எனப்பட்டன.

சூத்திரம் : 2 
 வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின்
ஆதந் தோம்பல் மேவற் றாகும்.