பக்கம் எண் :

166 

தொல்காப்பியர் - பொருட்படலம்
புறத்திணை யியல்

சூத்திரம் : 1 
 அகத்திணை மருங்கி னரிறப வுணர்ந்தோர்
புறத்திணை யிலக்கணந் திறப்படக் கிளப்பின்,
வெட்சி தானே குறிஞ்சியது புறனே;
உட்குவரத் தோன்று மீரேழ் துறைத்தே.

கருத்து : இது, குறிஞ்சிக்குப் புறனாவது வெட்சியென்பதையும், அதன் துறைவகை இனைத்து இத்துணைத்து என்பதையும் கூறுகிறது.

பொருள் : அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர் = = முற்கூறிய அகவொழுக்கம் பற்றிய இயல் வகை முறைகளைப் பிழையற நன்கறிந்தோர்; புறத்திணை இலக்கணந் திறப்படக் கிளப்பின் = = புற ஒழுக்க இயல் வகை முறைகளைத் தெளிவுபட வகுத்துரைப்பின்; வெட்சிதானே குறிஞ்சியது புறனே = = வெட்சித்திணை குறிஞ்சியெனும் அகத்திணைக்குப் புறனாகும்; உட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே = = அவ்வெட்சித்திணை அச்சம் விளைக்கும் தோற்றமுடைய பதினான்கு துறைவகை கொள்ளும்.

குறிப்பு : இதில், ஏகார மூன்றனுள், முதலது, வெட்சியைப் புறத்திணை ஏழில் பிறவற்றினின்றும் பிரித்து விலக்குதலால், பிரிநிலையாம்; பின்னிரண்டும் தேற்றம்; அசையுமாம். ‘அரில்தப உணர்ந்தோர் . . . . கிளப்பின்’ என்ற எச்சக்குறிப்பால், அகத்திணைகளி னியல்பை ஐயந் திரிபுகெட அறிந்தார்க்கன்றி, மற்றவர்க்கு அத்திணைகளொடு தனித்தனியியைபுடைய புறத்திணைகளினியல் திறம்படக் கிளத்தல் கூடாமை