தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 165 |
புறம்பன்னிரண்டென வகுத்தற்குரிய இயல் வேறுபாடு காணொணா மையையும், அத்தொகை வகை முந்துநூல் முறையொடு முரணிப் புலனெறிவழக்காகாமையையும் வலியுறுத்தும். எனவே, தொல்காப்பியரின் புறத்திணை வகுப்புமுறையே இயல்பொடு பொருந்தும் நயமுடைத்தாய்த் தொன்றுதொட்டு என்றும் நின்று வழங்கற்குரிய முன்னைத் தமிழக நன்முறையா மென்பது கண்டு தெளிக. இனி, அதத்திணையிய லுரைமுகத்துக் கூறியாங்குத் தொல்காப்பியர் நூலுள் இப்புறப்பகுதியிலும் பிறாண்டும் பிறர்கோள் பேசுமிடந்தவிர மற்றையவனைத்தும் ‘வண்புகழ்மூவர் தண்பொழில்வரைப்பின் அகத்தவர்வழங்குந் தமிழ்ப்பழமரபுகளே’ கூறப்பெறுகின்றன என்பதனை மறக்கொணாது. இவ்வுண்மையை மறந்து உரைகாரர் பிற வடநூற்கொள்கைகளை இத்தமிழ் நூல் கூறுவதாகக் கொண்டதனால் பல சூத்திரங்களுக்குத் தொல்காப்பியர் நோக்குக்கும் அவர் சூத்திரச் சொற்போக்குக்கும் பொருந்தாப் பொருள்கூறி இடர்ப்படலாயினர். “தமிழ் கூறுநல்லுலகத்து எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி, செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல்கண்டு முறைப்படவெண்ணிப் புலம் தொகுத்த” தொல்காப்பியரின் கருத்தைப்பேணி, அகப்புறத் தமிழ்ப்பழஞ்செய்யுண் மரபுகளுடன் முரணாவாறு, தமிழர் ஒழுக்கமுறை கூறும் இந்நூற் சூத்திரங்களின் உண்மைப்பொருள். அவ்வவற்றின் சொற்றொடரோடு அமைவுபெற நடுநிலையி லாய்ந்தறிய முயலுபவருக்குத் தெளிதல் எளிதாம். இதற்கு மாறாகத் ‘தமிழகத்தின் புறத்தவர்’ வழக்கவொழுக்கங்களைப் புகுத்தித் தமிழர் பொருளியற்கூற்றுக்களுக்கு விளக்கம் காண முயல்வது, ‘கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇயற்’றாய், பிழையொடு பீழை விளைப்பதாகும். * * * |