பக்கம் எண் :

164நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

அகப்புறத்திணையொன்று கருதுமாறில்லை. இயல் வேறுபட்ட இருவகைத் திணைகளைப் புணர்த்து அகப்புறமெனப் புதுவதோர் விரவுத்திணை வகுத்ததோடமையாமல், புறப்புறமென வொருவகைகோடல் எற்றுக்கு? அகத்தின் வேறு புறமாதல்போலப், புறத்தின் வேறுபடுவது அகமேயாகும். மற்றைய புறப்புறமென்பது பொருளில் கூற்றாம்.

“கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் ஏழனையும் அகமென்றலின், அவ்வகத்திற்குப் புறனாவதன்றிப் புறப்புறமெனல் ஆகாமை யுணர்க” எனக் காஞ்சிச் சூத்திரவுரையில் இம்முறையல்லா முறையை நச்சினார்க்கினியரும் மறுத்துரைக்கின்றார். பொருவோ ரிருவருள் ஒருவர் வெல்லுதல் போரினியல்முடிபாகும். இதில் போராம் தும்பையைப் புறனாக்கிப், போரில் வேறலாம் வாகையைப் புறப்புறமென வேறுபடுத்துவதேன்?தனிவேறியல்புடைய வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பைகளையெல்லாம் அகத்தின் வேறாம் பொதுவியல்கொண்டு புறமெனு மொருவகை யாக்குவோர், அவற்றோடியலியைபுடைய வாகை பாடாண்களையும் புறமாகக் கொள்ளாமல் வேறுவகையாக்கி மாறுபடுவானேன்?அன்றியும் ‘பொதுவியல்’ என்பன புறத்திணைகளுக்குப் பொதுவாம் துறைகளேயாதலின், அவையொருதனி வேறு திணையாமாறில்லையே. “பொதுவியலென்றோர் திணைப் பெயராகாமையுணர்க” என நச்சினார்க் கினியரும் இதை மதுரைக் காஞ்சியுரையில் மறுப்பதறிக.

மேலும் தொல்காப்பியர் போலவே கைக்கிளை பெருந்திணைகளைப் பிற்காலத்தும் அகவகையாகவே கொண்டாள்வது, நம்பியகப் பொருளானும் அகத்துறைக் கோவைகளானும் இனிது விளங்கும். அப்படியிருக்க, அவற்றையே மீட்டும் புறத்திணை வகையுள்ளும் கூட்டி அத்திணைத் தொகையெண்ணை மிகுப்பானேன்?இன்னும் புறத்திணைகள் காலமிடங்கருதாமல் ஒழுக்க நெறியில் ஒவ்வோரகத்திணைக்கும் புறனாதல் வேண்டுமென்ற நன்முறையிறந்து, புறத்திணைத் தொகையைப் பெருக்கி ஒழுக்க வேறுபாடின்றி எண்ணுக்குப் பன்னிரண்டாக்கி, அவற்றிற்கு அகத்திணை யேழனொடுந் தொடர்பறுத்துக் காணும் பயன்தானென்ன? பிந்திய நூல்கள் புறத்திணை யொவ்வொன்றன் துறைகள் இவை எனத் தொகுப்பதல்லால், தொல்காப்பியத்துட்போல அவ்வத்திணையின் செவ்வியல் விளக்காமையொன்றே,