பக்கம் எண் :

22நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

அஞ்சிறை வண்டி னரிக்கண மொலிக்கும்”

(முருகு. வரி 73-76)

என்பதவ்வடிகள். இதில், வண்டினம் இரவில் தாமரையில் தூங்கி, வைகறையில் நெய்தல் மலரூதி, பிறகு ஞாயிறெழும் விடியலில் சுனைப்பூக்களி லொலிக்கும் எனக்கூறி, இரவு, வைகறை, விடியல் என மூன்றும் மூவேறு பொழுதெனத் தெளிக்கப்படுகின்றது. எனில், இதில் “எல்பட” என்பதற்கு “ஞாயிறு எழ” எனப் பொருந்தாப் பொருள் கூறுவதினும், “ஞாயிறடையும் பகலிறுதிப் பொழுதில்” எனக் கொள்ளுவதே சொல்லும் மரபும் சுட்டும் நல்ல கருத்தாகும்; எனவே விடியலுக்கு முன் வைகறையில் விழித்தெழும் வண்டினம் நெய்தலூதி, மாலைக்கு முன் பகல் மாய்ந்து சுடர்படும் எற்பாட்டில் சுனைமலர்களிலொலிக்கும் என்பதே இவ்வடிகளுக்கு நேரிய செம்பொருளாகும். இனி, வைகறை விடியல் எனுமிரு சிறுபொழுதும் ஒழிய எற்பாடு இவற்றின் வேறாய பகலிறுதிப் பொழுதென்பது,

“பகன்மா யந்திப் படுசுட ரமையம்”

என அகம் 48ஆம் பாட்டிலும் தெளிக்கப்படுகிறது. இன்னும்,

“படுசுட ரடைந்த பகுவாய் நெடுவரை
 முரம்புசேர் சிறுகுடிப் பரந்த மாலை” (நற். 33)

எனும் இளவேட்டனார் பாட்டும், இரவின் முதற்பொழுதான மாலையை எற்பாட்டின் பிற்பொழுதாகக் கூறுதலும், பகலிறுதிப் பொழுதைப் படுசுடர் எனச் சுட்டுதலும் காண்க. “நெய்தல் கூம்ப நிழல்குணக் கொழுக. . . . . . . , கல்சேர் மண்டிலம் நிவந்துநிலம் தணிய எனும் ஒளவை நற்றிணை (187ஆம்) பாட்டுமதுவே கூறுகிறது. “ஒன்றுதுமென்ற தொன்றுபடு நட்பில்” (நற். 109) எனும் பெரும்பதுமனார் நற்றிணைப் பாட்டிலும் “உலமரக் கழியுமிப் பகல்மடி பொழுதே” என வருதலறிக. இன்னும் இரவின் முதற்பொழுதா மாலைக்கு முந்திய பகலிறுதிப் பகுதியை “கல்சுடர் சேரும் கதிர்மாய் மாலை” (321) என மள்ளனாரும் கூறுதல் காண்க. இனைய பல பழம் புலவர் பாட்டுக்களால் பொழுது புலர்ந்து கதிர் விரியும் இளவெயிற் காலையாய பகற்பொழுதின் முதற்பகுதியே விடியலென்றும், இருள் புலருமுன்னுள்ள இரவின் இறுதிப்பகுதி நேரமே வைகறையென்றும்,