பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை23

சுடர்படும் பகலிறுதிக்காலமே எற்பாடென்றும் மயக்கத்திற் கிடனின்றித் தெளியக்கிடக்கின்றது.

இன்னும், “முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலையென முறைசெய்தற்கேது, மாலையாமம், வைகறை, காலை, நண்பகல் என்னும் சிறுபொழிதின் கிடக்கைமுறையேயன்றி வேறின்மையானும், ஏனைத்திணைகட்குச் சிறுபொழுது ஒரோவொன்றேயாகலின் மருதமாத்திரைக்கிரண்டு கோடல் பொருந்தாமையானும், அஃதுரையன்றென மறுக்க” என்னும் சிவஞானமுனிவர் கூற்றும் பொருந்தாமையறிக. சிறுபொழுது ஐந்து மாலை முதல் நண்பகல் வரையெண்ணி நிறுத்தப்படின், ஒருநாளுலப்புறாமல் பிற்பகல் பெயரும் பயனுமின்றி வீணே விடப்படுமாகலின், ஈண்டு எண்ணப்பெறாத பிற்பகலாகிய சிறுபொழுதொன்றுண்மையும், அதுவே எற்பாடாவதும் விளக்கமாகும்.

அன்றியும், அன்பினைந்திணைமுறை சிறுபொழுதின் கிடக்கை முறை பற்றியதேயாகும் என்பதற்கு முனிவரவர்களின் கூற்றைத் தவிரப் பிறிதாதரவின்மையானும், பெரும்பொழுதாறினை ஐந்து திணைக்கு ஒரோவொன்றாய்க் கொடுத்தமையாததாலும், சிறுபொழுதுகளு மவ்வாறமைதல் வேண்டா. குறிஞ்சிக்குக் கூதிரொடு முன்பனியும், பாலைக்கு வேனிலொடு பின்பனியும் ஆக இவ்விரண்டு பருவந்தந்துவைத்தும், மருதத்திற்கும் நெய்தலுக்கும் பெரும்பொழு தெதுவும் பிரித்துரிமை செய்யாமலும் சூத்திரிக்கும் ஆசிரியர் முறையிற் பொருத்தம் காணும் முனிவரவர்கள் மருதத்திணையொன்றற்குச் சிறுபொழுதிரண்டமைத்தலில் பொருந்தாப் பெருந்தவறு காணுதற்குரிய நியாயத்தை விளக்கினார்களுமில்லை. இனி, பிற்றைய நாற்கவிராச நம்பியார் சிறுபொழுதைந்தென்று கூறுதலால், பண்டைப்புலவர் பாட்டுக்களைப் பொய்யாக்கித் தொல்காப்பியர் சூத்திரங்களுக்கும் புதுப்பொருள் காண்பது உரையறமாகாது. மேலும் வைகறையும் விடியலும் மருதத்திணையான ஊடலுக்கு உரித்தாமாறும், மாலையையும் யாமத்தையும் பரத்தையர் வீட்டிற்கழித்த தலைவன் தன்மாட்டு மீட்டுவரும் வைகறை விடியற்காலங்களில் தலைவி அவனோடூடுதல் இயல்பாவதும், பிறகு பொழுதேறி விருந்தினர்க்கு வேளாண்மை செய்தலால் ஊடல் தீர்தல் முறையென்பதும், மருதக்கலி நெய்தற்கலி முதலிய பண்டைய அகத்துறைப் பாட்டுக்களால் இனிது விளங்கும்.