பக்கம் எண் :

304நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

இதில், உற்க முதலியன பகைவருக்குத் தீது சுட்டும் வாய்ப்புள் (உற்பாதம்). அவற்றை நோக்கிப் பகைவர் மேற் கிள்ளி படையெடுத்துச் செல்ல, அவன்பகைவர் அஞ்சித் தத்தம் புதல்வரை முத்தி மனக்கலக்கத்தை மனைவிமார்க்கு மறைப்பர். அந்நிலையிற் காற்றுக்கூடிய நெருப்புப்போல் அவன் தகைவாரின்றி விரைந்துசென்று வென்று வீறெய்தப் பகைவர்நாடு பெருங்கலக்குறும் என்று, அவன் வென்றிப் புகழும் அவன் மாற்றார் நாடழிபிரக்கமும் கூறுதலால், இது கொற்றவள்ளைப் பாடாணாயிற்று. “மண் திணிந்த நிலனும்” எனும் புறப்பாட்டில்,

“ஐம்பெரும் பூதத் தியற்கை போலப்
 போற்றாற் பொறுத்தலும் சூழ்ச்சிய தகலமும்
 வலியும் தெறலும் அளியு முடையோய்!
 . . . . . . . . . . . . . . . . . . . .
 பாஅல் புளிப்பி னும்பக லிருளினும்,
 . . . . . . . . . . . . . . . . . . . .
 நடுக்கின்றி நிலியரோ வத்தை, அடுக்கத்து
 . . . . . . . . . . . . . . . . . . . .
 பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்றே”

- புறம். 2

எனவருவது பாடாண் திணையில் ஓம்படையுள்ளிட்ட வாழ்த்துத் துறையாகும்.

ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பிற் காலமூன்றொடு கண்ணியவருமே = உலகியலில்வரும் ஒழுக்க நோக்கால் முக்காலமுந் தழுவிப் பாடாண்துறைகள் வரும்.

குறிப்பு : இந்நூற்பாவில் வரும் உம்மைகள் எண் குறிப்பன. “பக்கம்” என்பது இசை நிரப்பநின்றது. ஈற்றேகாரம் அசை.

இதிற்கூறப்படுந் துறைகள் எல்லாம் பலதிறப்பட்ட புறத்திணைகளுக்குரிய வெனினும், அவை அவ்வத்திணைப் பொருளோடமையாது தலைவன் புகழ் பரவல்களாயும் வருதலால் பாடாண்துறைகளாய் முடிகின்றன. அதனாலவை முன் பிறதிணைகளோடு கூறினும் ஆங்கு வேறுபொரு ணோக்குடைமையின், இங்கவை கூறியன கூறும் குற்றமாகாமை தேறப்படும்.

புறத்திணையியற் புத்துரை முற்றிற்று.