மெய்ப்பாட்டியல் முன்னுரை தொல்காப்பியர் பொருட்பகுதி தமிழ்கூறுநல்லுலகத்தில் நல்லிசைப்புலவர் புனையும் செய்யுண்முறையும், அச்செய்யுட்கெல்லாம் சிறந்துரிய பொருட்டுறையும், இவற்றின் பல்வேறுறுப்பியல்களும் வகுத்து விளக்குவதாகும். மக்கள் கருதுவது பொருளே யாதலானும், செய்யுள் பொருளைப் புனைந்துரைக்குங் கருவியேயாதலானும், முதலில் சிறப்புடைப் பொருட்டுறை வகைகள் அகத்திணை, புறத்திணை, களவு, கற்பு, பொருள் என ஐந்தியலான் வகைபடத் தொகுத்து விளக்கப்பட்டன. பின் அகப்புறப் பொருள்களைப் புனைந்துரைக்கும் செய்யுள் வகை கூறத்தொடங்கி, அச்செய்யுளுறுப்புக்களுள் பொருட் சிறப்பிற்கு மிக்குரிமையுடைய மெய்ப்பாடு உவமை வகைகளை முன் இரண்டியல்களான் முறையே வகுத்து விளக்கி, பிறகு பிற செய்யுளுறுப்பும் அமைப்பும் வகையும் செய்யுளியலில் தொல்காப்பியர் தொகுப்பாராயினர். இம்முறையில் இவ்வியல் ‘மெய்ப்பாடு’ என்னும் செய்யுளுறுப்பை விளக்குவதாகும். மெய்ப்பாடு என்பது அகவுணர்வுகளை ஆழ்ந்து ஆராயாமலே யாரும் இனிதறியப் புலப்படுத்தும் இயற் புறவுடற் குறியாம். இயற்றமிழ்ச் செய்யுளில் இயற்குறியன்றிச் செயற்கைக்குறி புணர்க்கும் வழக்காறில்லை; உணர்வோடுள்ளக் கருத்தையுரைக்கப் பல செயற்கைக்குறி வகுத்துக் கோடல் கூத்துநூற் கொள்கையாகும். (பட்டாங்கு) மெய்ப்படத் தோன்றும் உள்ளுணர்வை மெய்ப்பாடென்றது ஆகுபெயர். உள்ளுணர்வை உரிய இயற்புறக்குறியால் புலவன் செய்யுளில் புலப்பட அமைத்தல் |