தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 307 |
வேண்டுமாதலின், செய்யுளுறுப்புக்களுள் மெய்ப்பாடு சிறப்பிடம் பெற்றது. அதனை விளக்கும் பகுதி மெய்ப்பாட்டியல். “உய்த்துணர் வின்றித் தலைவரு பொருளான் மெய்ப்பட முடிப்பது மெய்ப்பா டாகும்” (செய். சூ. 204) எனும் செய்யுளியற் சூத்திரம் மெய்ப்பாட்டியல் கூறுகிறது. இம் மெய்ப்பாடுகள் பொதுவாக அகப்புறப்பொருட்டுறை அனைத்திற்கும் அமையவருவனவும், சிறப்பாக அகத்துறைகட்காவனவும் என இயல் வேறுபாடுடையவாதலின், பொதுவியல்புடையவற்றை இவ்வியலில் முதற்கூறிச் சிறப்பியல்புடையன பின்னர் விளக்கப் பெறுகின்றன. ஒருவரின் உள்ளுணர்வுகளுள் மற்றவர் கண்டுங் கேட்டும் அறியப் புறவுடற் குறியாற் புலப்படுபவையே இயற்றமிழ்ச் செய்யுளில் மெய்ப்பாடு எனப்பெறும். பாட்டு உரை நூல் முதலிய எழுவகைத் தமிழ்ச் செய்யுளெல்லாம் ‘வட வேங்கடம் தென்குமரி யாயிடைத் தமிழகத்து முடிவேந்தர் வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெயரெல்லை அகத்து யாப்பின் வழியதா’மெனச் செய்யுளியலிலும், ஆரியநூல் வழக்குகளைக் கொள்ளாது தமிழ் மரபினையே தாம் கூறுவதாகப் பலவிடத்தும் தொல்காப்பியரே வற்புறுத்துவதாலும், தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாடுள்ளிட்ட செய்யுளுறுப்பனைத்தும் இயற்றமிழ் மரபு தழுவியவேயாகும் என்பது ஒருதலை. இவ்வுண்மைக்கு மாறாகப் பிற்கால உரைகாரர் தொல்காப்பியருக்குக் காலத்தாற் பிந்திய வடஆரியக் கூத்து நூல்களின் கொள்கைகளே தொல்காப்பியரும் கூறுவதாகக் கொண்டு இவ்வியற்றமிழ் நூற் சூத்திரங்களுள் வடநூல் வழக்குகளைப் புகுத்தி இடர்ப்பட்டுச் சொல்லொடு செல்லா வல்லுரை வகுத்து மயங்க வைத்தார். சொற்றொடர் சுட்டும் செம்பொருளே செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு மயங்கா மரபிற் புலம் தொகுத்த தொல்காப்பியரின் கருத்தாமாறுணர்ந்து நோக்கின், செய்யுளுப்புக்களுள் ஒன்றாய் எண்ணப்பட்டுச் செய்யுளியலில் (204ஆம் சூத்திரத்தால்) தெளிக்கப்பெறும் இயற்குறியாம் மெய்ப்பாடுகளின் வகைகளே இம்மெய்ப்பாட்டியலில் முறைப்பட எண்ணி விரிக்கப்பெறுஞ் செவ்வி இனிது விளங்கும். |