308 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
இவ்வியல் முதற்சூத்திரம் ‘எண்வகை யியல்நெறி பிழையா’தெனச் செய்யுளியல் (205ஆம்) சூத்திரம்கூறும் அகப்புறப் பொருட்டுறை அனைத்திற்கும் பொதுவாய மெய்ப்பாட்டுப் பொருளா முள்ளுணர்வு முப்பத்திரண்டும் புறத்தே இயற்குறியால் முறையே நானான்காய்த் தொக்கு எண்ணான்காகுமெனக் கூறும். இரண்டாம் சூத்திரம், அவ்வாறு நானான்காய் எண்வகையாவனவேயன்றி, வேறு எவ்வெட்டாய்த் தொகுத்து எண்ணப்படும் மெய்ப்பாடு முப்பத்திரண்டும், இரட்டுற மொழிதலால் நாலிரண்டாகும் என்பதை உம்மைத் தொகையாக்கி நாலும் இரண்டு கூட்டி ஆறுவகைத் தொகைகளாய் எண்ணப்படுவனவுமாக அகப்பகுதிக்கே உரிய பிற மெய்ப்பாட்டுள்ளுணர்வுகளும் உளவென்பது கூறுகிறது. மூன்றாம் சூத்திரம், முதலிற் கூறிய நானான்காய்த் தொக்கு அகம்-புறம் இருபொருட்கும் பொதுவாய் வரும் எட்டு வகைத் தொகை மெய்ப்பாடுகள் இவையென விளக்கும். 4 முதல் 11 வரையிலுள்ள சூத்திரங்கள், அவ்வினத்தொகை எட்டும் தனிவகை பிரிக்கவரு முப்பத்திரண்டன் பெயரும் வகையும் விரிக்கும். 12ஆவது சூத்திரம், நந்நான்காய் இவ்வாறெண்வகை இயனெறி பிழையாது வருவனவேயன்றி, எவ்வெட்டாய்த் தொகுத்தெண்ணப்படும் மெய்த்தோன்றும் அகவுணர்வுகள் வேறும் உள என முன் இரண்டாம் சூத்திரம் சுட்டியவற்றின் பெயரும் வகையும் கூறும். பதின்மூன்று முதல் பதினெட்டு முடியவரும் ஆறு சூத்திரங்களால் அன்பொடு புணர்ந்த காதற்கூட்டத்தில் தோன்றும் அறுவகைத் தொகைபெறும் அகத்துக்கேயுரிய மெய்ப்பாடுகள் தெளிக்கப்படுகின்றன. 19ஆம் சூத்திரம், அறுவகைப்படுமவையும் அன்னபிறவும் புணர்வின் நிமித்தமாமென உணர்த்துகிறது. 20ஆம் சூத்திரம், மேலனவற்றிற்குப் புறனடையாய், அவை கூறும் அகத்துறை மெய்ப்பாடுகள் கையறவுற்றுழிக் கூறியமுறையால் வினைப்பட்டுத் தோன்றாது முறை பிறழ்ந்து வருதலும் இயல்பாமெனக்கூறும். 21 முதல் 24 வரையுள்ள சூத்திரங்கள் புணர்ச்சி அல்லாத மற்ற நான்கு அன்புத்திணைகளுக்குரிய மெய்ப்பாடுகளைக் கூறுகின்றன. 25, 26 சூத்திரமிரண்டும் நிரலே அன்புத்திணைக்காவனவும் அல்லனவுமாம் குறிப்புக்களை விளக்குகின்றன. 27ஆம் சூத்திரம், இவ்வியலுக்குப் பொதுப்புறனடையாய் மெய்ப்பாடுகளின் இயல்வகைகளை நுண்ணுணர்வுடையாரல்லார் எண்ணி வரையறுத்தலின் அருமை கூறுகிறது. |