396 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
பொருள் : யாவரும் உகக்கும் மனமலர்ச்சியும், அதற்குத் துணையாய் மக்கள், மதிக்கும் பொருளும், அவை இரண்டையும் விளைக்கும் அறனுமாக மூன்றும் சேர்ந்து அன்பு தழுவிய ஐவகை ஒழுக்க நெறியில் காதற்கூட்டத்தை ஆராயுங்கால். அது வேதியர் மருங்கில் ஓதப்படும் கூட்டமெட்டனுள், இசைநூற்படி யமைந்த இனிய யாழ்வல்ல கந்தருவமணத்தைக் காதலியல்பால் ஒரோவழி ஒக்கும். குறிப்பு : ஒத்த காதலர் உயிரொன்றிக்கூடும் அன்பொழுக்கம், துவக்கத்தில் பிறர்க்கு மறைக்கப்படினும், மணத்தொடு மலர்ந்து வயதொடு வளர்ந்து இருவரையும் மனையறம் புகுத்தலால், அது அற்தொடு புணர்ந்ததாகும். இதை, “அறத்தான் வருவதே இன்பம்; மற் றெல்லாம் புறத்த, புகழு மில. ” (குறள் : 39) என்பதில் ‘ஏ’காரமும், ‘எல்லாம்’ என்பதும் தமிழரின்பக் கருத்தை வற்புறுத்தலாலறிக. பொருள், அறமும் இன்பமும் விளைமுளையாதலை, “அறனீனும், இன்பமு மீனும், திறனறிந்து தீதின்றி வந்த பொருள்” (குறள் : 754) எனும் குறளிற்காண்க. இழிகாமப் பெருந்திணையும் ஒருதலை முனைத்த கைக்கிளையும் விலக்கி, அக உரிப் பொருள்களாக இருவயினொத்த அன்பினைந்திணைக் காதற்கூட்டத்தை மட்டும் கட்ட, “அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற் காமக்கூட்டம்” என்று கூறப்பட்டது. இதில் ‘காமம்’ ஆசை சுட்டும் வடசொலன்று. அன்புப் பொருளுடைத் தமிழ்ச்சொல்லாகும்; அன்பை அதாவது காதலைக் குறிக்கும். இவ்வியலிலேயே, “காமத்திணையில்” எனக் காமத்தை ஒழுக்கத்தொடு சேர்த்துக் கூறுதலானும், ‘காமஞ்சான்ற’ எனக் கற்பியலில் கூறுதலானும், இழிதரு காமம் ஒழிய விலக்கி, மேதகு கடவுட்காதலையே காமத்தமிழ்ச்சொல் கண்ணுதல் தேற்றம். மேலும் ‘கற்பும் காமமும்’ எனும் கற்பியற் சூத்திரத்தின்கீழ், |