தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 395 |
தெளியும்வரை, தோழி தன்பால் குறையிரந்து பின்னிற்கும் தலைவனுக்கிடந்தராமை 37லும், தலைவி யொருப்பாடறிந்தபின் அவளைத் தலைவனிடம் சேர்க்க வழி வகைநாடிக் கூட்டுந்திறனும் தோழியினுரிமை என்று 38லும் குறிக்கப்படுப. 39 முதல் 42 வரையுள்ள சூத்திரங்கள், களவுக் காலத்துத் தோழி துணையால் குறியிடம் பெற்ற தலைவன் இரவிலும் பகலிலும் ஏற்றவழி தலைவியைக் கூடுமுறை கூறும். 43-தலைவன் சிறைப்புறம் நிற்க, தலைவியும் தோழியும் வரைவு வற்புறுத்திக் குறிப்பானவற்குக் கூறுமுறை சுட்டும். இனிக் களவுக்காலத்துத், தலைவிபோற் காதலால் தொடலையும் தொழிலும் துறந்து ஒழுகுதல் தலைவனுக்கில்லா ஆணியல்பு 44லும், அதுபோலவே, கரவொழுக்கத்துத் தலைவன் இரவு வருவதின் ஏதமும் ஊறும் நினைந்தினைதல் தலைவிக்கன்றித் தலைவற்கில்லாமை 45லும் சுட்டப்படுப. தலைமகள் களவுக் காதலை, அவள் தந்தையும் தன்னையரும் பிறர் கூறாமல் தாமே குறியானறிதலும், தாய் செவிலி போலக்கூற வுணர்தலும் முறையே 46-47 சூத்திரம் சொல்லும். களவொழுக்கம் பிறர்க்கு வெளிப்படுவது தலைவனால் நேர்வதன்றித் தலைவியால் நேராமை 48ஆவதிலும், அவ் வெளிப்பாட்டாலாயினும், வெளிப்படுமுன் தலைவியின் குரவர் நேர்ந்து கொடுக்கப் பெற்றாயினும் தலைமகன் வரைந்து கோடல் 49ஆவதிலும் கூறப்படுகின்றன. இறுதியில், களவு வெளிப்பாட்டின்பிறகு, நெட்டிடையிட்டுப்பிரிதல் கூடாமையின், வரையுமுன் பிரிவு நீளாதஃகிய இருவகையன்றிப் பிறவகையின்மை 50ஆவது சூத்திரம் சுட்டும். சூத்திரம் : 1 | | | இன்பமும் பொருளு மறனு மென்றாங் கன்பொடு புணர்ந்த வைந்திணை மருங்கிற் காமக் கூட்டங் காணுங் காலை, மறையோர் தேஎத்து மன்ற லெட்டனுள் துறையமை நல்லியாழ்த் துணைமையோ ரியல்பே. |
கருத்து : இது, களவொழுக்கத்துக் காதற் கூட்டத்தை ஆயுங்கால், அது வேதியர்வகுத்த கூட்ட மெட்டனுள், காதலளவில் கந்தர்வ மணத்தியல்பை ஓரளவொக்கும் எனக் கூறுகிறது. |