பக்கம் எண் :

398நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

வளர்ப்பது, தமிழ்மண மரபு. இதனை, இந்நூற்பா விதந்து விளக்குகிறது. எனவே,

“என்றுங் குன்றா அன்பின் விளைவாய்
 அறத்தொடு புணர்ந்த காதல் வாழ்வே
 களவுத்திணை”

எனக் களவியல் விளக்குவது. இச்சூத்திரக் கருத்தெனக் கண்டுதெளிக.

சூத்திரம் : 2 
 ஒன்றே, வேறே என்றிரு பால்வயின்
ஒன்றி யுயர்ந்த பால தாணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப;
மிக்கோ னாயினும் கடிவரை யின்றே.

கருத்து : இந்நூற்பா, பண்பொத்துப் பால் வேறுபட்டாரிருவர் உழுவற்காதலெழுதற்கிடனாம் காட்சி கூறுகிறது; அதாவது உழுவலரிருவர் உளமொருப்பட்டு உயிரொன்ற முதலிற் றலைக்கூடுங் காட்சியின் மாட்சி கூறுகிறது.

பொருள் : ஒன்றே, வேறே, என்றிருபால்வயின் = நானிலப் பரப்பில், ஒரு நிலத்திருவராதல், அன்றி அவ்விருவர் வெவ்வேறு நிலத்தராதல் என இருமுறையில்; பாலதாணையின் = அதுவரை அவரறியாது மறைந்து அவருள்ளத்துறைந்த உழுவல் தழைந்திணைக்கும் அவர்க்கியல்பான பால்விளியால்  (Sex Urge); ஒன்றியுயர்ந்த ஒத்தகிழவனும் கிழத்தியுங்காண்ப = உயிரொன்றி உணர்வொத் துயர்ந்த பத்தும் பண்பும் ஒத்தாரிருவர், ஒருவருக்கொருவ ரின்றியமையாக் (காதற்) கிழவராய்த் தாமே தலைப்படுவர்; மிக்கோனாயினுங்கடிவரை யின்றே = இருவரும் ஒவ்வாவிடத்துத், தலைமக னுயர்வு தள்ளுதற்கில்லை.

குறிப்பு : முதலடியில் ‘ஏ’காரமிரண்டும், இரண்டிலொன்று எனக்குறிப்பதால், பிரிநிலை. எண் இடைச் சொல். ‘உயர்ந்த’ எனும் பெயரெச்சம். தனித்தனியேசென்று கிழவனும் கிழத்தியும் என்ற பெயர்களுடன் முடியும். அதைப் பாலுக்கு அடையாக்கிற் பொருள் சிறவாது. உயர்வதும் தாழ்வதும் பாலியல்பன்றாதலின் அன்றியும் ‘உயர்த்தும்’