தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 399 |
என்னாமல் ‘உயர்ந்த’ எனத் தன் வினைச்சொல்லாயும், ஒன்றியென்னும் தன் வினையெச்சத்திற்கு முடிவிடமாயும் நிற்பதாலும். அது பாலுக்கு அடையாமாறில்லை. ‘பால்’ முதலடியில் முறை அல்லது வகையும், இரண்டாமடியில் ‘ஆண் பெண்’ இயல்பால் எழும் அற உழுவற் கிழமையுங் குறிக்கும். ‘பாலதாணை’ என்பது, பத்துப்பண்பு மொத்துப் பாலியலிணைக்க, இருவர் ஒருமனப்பட்டு உயிரொன்றி, ஒருவரையொருவரின்றியமையா உணர்வு தழைய ஈர்த்திணைக்கும் உயிரியல்பின் ஏவல்; அதாவது ‘பால்விளி’யைச் சுட்டுவதாம். (பால்விளி- Sex Urge. ) பால் வேறுபாட்டால் யாரும் யாரையுங் கண்டவுடன் காதலிப்பதியல்பில்லை. உள்ளுணர்வால் உயிரொன்றற் கொத்தாரே கண்டாங்குக் காதலித்து இருவயினொத்து ஒருமனப்பட்டு உயர்வாழ்வால் இன்பம் துய்ப்பர். பால் வேறுபாட்டால் மட்டும் எவரும் தாம் கண்ட எவரையும் காதலிக்கப் ‘பாலியல்’ விளியாது. ஒரோவிடத் தோரளவு பொறி வயத்தார் சிலருக்கு உணர்வு திரிவதுண்டெனின், அது இருவயினொத்தொரு மனத்தால் உயிரொன்றும் மாறா மெய்க் காதலாகாது. எழுந்து அழியும் இழிகாம விகற்பமாகும். அனையவர் காமம் நிலையுதலில்லை. உள்ளமும் உயிரும் இரண்டற ஒன்றுபட் டுயர்தற்கேற்ற உழுவலன்பு, முளையோடு விளைதிறனும் அகத்தடங்கியமையும் விதை போன்றதாம். அவ் வித்து, நீர் ஊர முளை கிளைத்து வளர்வதுபோல், உழுவற்காதல் மறைந்துறையு முள்ளத்தாரெதிர்ப்பாட்டால்; அவர் காதல்முளை கூர்த்துத் தளிர்த்துயர்ந்து தழைவதியல்பு. அதுவே, பாலது (விளி = ) ஆணையாகும். ‘உழுவ’லாவது தூண்டும் பிறதுணையும் பொருட்டும் வேண்டாது, பண்பொத்துப் பால் வேறுபட்டார் இருவரகத்துருவின்றி ஒடுங்கியிருந்து, அவர் எதிர்ப்பட முளைத்து விளையும் அன்பறக்காதல். ஒத்தபண்பு பத்தாதல், “பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு உருவு, நிறுத்த காம வாயில், நிறையே, அருளே, உணர்வொடு, திருஎன முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே” என மேல்வரும் மெய்ப்பாட்டியல் சூத்திரத்தான் அறிக. |