400 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
இனி, முன்னறியாமல் முதலிலெதிர்ப்படும் பண்பொத்த இருபாலார் தலைப்பட்டு. அக்காட்சியில் அவரிடைக் காதலெழ உளமொன்றி, அதனால் ஒருவருக்கொருவர் காதற்கிழமை கொள்வர். ஆகவே, கண்டு காதலித்து அன்புரிமை பூண்டார் என்று கூறுதல் முறை; அதற்குமாறாகக், “கிழவனுங் கிழத்தியுமாகக் காண்பர்” என்றது, காலவழு என்பார்க்கு, அவர் கருத்தை மறுத்து களவறக் காதல் பற்றிய பண்டைத்தமிழர் கொண்ட கருத்தை வற்புறுத்த வேண்டி இவ்வாறு கூறப்பட்டதென்க. முன் அகத்தில்லாது புதிதாய்க் காட்சியிற் பிறப்பது. உழுவற்காதலன்று. காமமாகும். அதை இணைவிழைச்சு என்பர் தமிழ்நூலார். அது உழுவலன்பின்மாட்சிக்கு மாறுபட்டது. ‘உழுவற்’ காதல் உள்ளத்தொடுங்கி என்றும் நின்றது; முன் அகத்தில்லாது புதிதாய்ப் பொறிவழிப் புகுந்து, காண்பார் உணர்வைக் கவ்வியலைப்பது காமம்; அது, விதையாமல் வளரும் களைபோல. ஒழிதற்குரிய உணர்ச்சிவெறி, காணாமுன் இருவரகத்தும் ஒடுங்கியுறையும். உழுவற்காதல் கண்டாங்கே காட்சியொடு தோன்றுமாட்சியைத் தெளிக்கக், காண்பது மிருவரும் காதற் கிழமைபூண்பதும் ஒரு காலத்துடனிகழ்ந்து, இருவருங் காதலுரிமையொடு மெதிர்ப்படுவர் எனத் தெளிய விளக்கிய நயம் மிக வியக்கத்தக்கது. இனி, ‘பாலதாணை’ என்பதை விதியின் ஏவலெனக் கொண்டுரை கூறினர் பழைய உரைகாரர். அது, தமிழ் மரபழித்தலால், தவறெனமறுக்க. விதியை விலக்கிக் களவிற் காதலர் உழுவலன்பின் விழுமிய இயல்பும் நூன்மரபும் விளக்கி, பேராசிரியர் திருக்கோவை ஏழாம் கலித்துறை உரையிற் கூறுதலானும் இவ்வுண்மையறிக. களவுக் காதலர் உழுவல் “அன்பிற்குக் காரணம் விதியல்லாமை ஈண்டுப் பெற்றாம் . . விதியாவது செயப்படும் வினையினது நியதியன்றே. அதனானே (விதியானே) அன்புதோன்றிப் புணர்ந்தாரெனின், அதுவும் செயற்கைப் புணர்ச்சியாய் முடியும். அது மறுத்தற் பொருட்டன்றே தொல்லோரிதனை இயற்கைப் புணர்ச்சி எனக் குறியிட்டது. அல்லதூஉம், நல்வினை துய்த்தக்கால் முடிவெய்தும்; இவர்களன்பு துய்த்தாலு முடியாது எஞ்ஞான்றும் ஒரு பெற்றியே நிற்கும் அல்லதூஉம், . . . பலபிறப்பினும் ஒத்த அன்பு என்றாராகலின். பலபிறப்பினும்ஒத்துநின்றதோர்வினை இல்லை என்பது (எனவே) இவரன்பிற்குக்காரணம் விதியன்றென்பது. ”இது தமிழ்மரபு தழுவிப் பேராசிரியர் களவுக் காதலை விளக்கியவாறு. |