தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 409 |
கருத்து : இது, தலைக்காட்சியிற் காதலர் ஐயுற்றுத் தெளிந்ததும், இருவரகத்தும் ஒத்த காதலுண்மையை அவர் உய்த்துணர்ந்து உள்ளத்தா னொன்றுற்குரிய ‘குறிப்பறிதல்’ கூறுகிறது. பொருள் : அறிவுடம்படுத்தற்கு = (கண்டு கடுத்துத் தெளிந்த காதலர்) உணர்வொத்து உள்ளத்தாலொருப்பட்டுக் கலத்தற்கு (முன்); நாட்டமிரண்டும் = ஏதிலார்போலப் பொதுநோக்கும் காதற்குறி நோக்கும் ஆய இருநோக்கும்; கூட்டி உரைக்கும் குறிப்புரையாகும் இருவரும் கருத்தொருமித் திணைதலை உணர்த்தும் குறிப்பு மொழியாம். குறிப்பு : உட்கருத்தைக் கட்புலத்துக் கண்டறிய நாடும் நோக்கம் ‘நாட்டம்’ எனப்பட்டது. உள்ளத்துழுவ லன்புடையார் மட்டும் உய்த்துணரக் காதற்குறிநோக்கும். அஃதிலார் ஐயுறவொண்ணாத நொதுமல் பொதுநோக்கும் ஆக இருநோக்கும் முன்னறியா இருபாலார் முதலெதிர்வில் கொள்ளுவதே முறையாதலானும், ஏதிலார்தம்முட் குறிக்கொண்டு நோக்கல் நாகரிகர் இயல்பன்றாதலானும், பொதுவும் குறிப்புமாகிய “நாட்டமிரண்டும் கூட்டி உரைக்கும்” என்று குறிக்கப்பட்டது. இனி, இருவர் குறிநோக்கும் ஒத்தாலன்றி ஒருப்பாட்டுணர்வு பிறவாதாகலின், இருவர் நோக்கமும் ஒருங்கு குறிக்கவேண்டி நாட்டமிரண்டும் எனப்பட்ட தெனினும் இழுக்காது. “கூட்டியுரைக்கும் குறிப்புரை”யாவது உழுவற்காதலால், இருவர்தம் உள்ளம் ஈர்த்து இணைவதைக் குறிக்கும் நோக்கம் என்றவாறு. இக்கருத்தைக் “கண்ணொடு கண் இணைநோக்கு ஒக்கின்” என வள்ளுவர் வற்புறுத்தலானும் தெளிக. குறிப்புரை என்றது, வாயாற் பேசாது விழியாற் குறிக்கும் மொழியை, ‘உள்ளப் புணர்ச்சிக்கு, குறிப்பறிந் தறிவுடம்படுதல் இன்றியமையாமையின், காட்சிக்குப் பின்னும், உணர்வுப் புணர்ச்சிக்கு முன்னும் குறிப்பறிதலை வள்ளுவரும் கூறுதல் காண்க. ஒருவர் கண்ணிலவர் எண்ணக் குறிப்பறியு முண்மை. “உரையும் ஆடுப கண்ணினானே” “கண்ணிற் சொலிச்; செவியினோக்கும்” என்ற ஆன்றோர் செய்யுளடிகளானும்; “கூறாமைநோக்கிக் குறிப்பறிவான். ” “ஐயப்படா தகத்ததுணர்வான். ” “அகநோக்கி உற்றதுணர்வார். ” “நுண்ணிய மென்பா ரளக்குங்கோல் காணுங்கால் கண்ணல்ல தில்லைபிற” எனுங் குறளடிகளானுமுணர்க. இனி, விழிமொழியும் குறிப்புரைக்குச் செய்யுள் வருமாறு : |