பக்கம் எண் :

408நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

இழையா (செய்யா) அணியே யாதலின், இழை ஐயமகற்றுங் கருவியாகும். வள்ளி, சந்தனக்குழம்பால் மார்பிலிடுங்கோலமாதலின், அதுவும் தேவர்க்கில்லை.

பூ, தேவருலகிலுள்ளது, வாடாது; வாடுமலர்கள் மாந்தர் பாலது. கண், மக்களது அகத்தியல் நிழற்றும் முகத்தொளிர் விளக்கு; தேவர்விழி, உள்ளுணர் வொளித்துப் புறநிகழ்வு கொள்ளும் கள்ளவழியேயாகும் (பொறிச்சுருங்கை) அலமரல்நாண், மடம், பற்றி உளம்தடுமாறல்; தேவர்க்கஃதின்மையின், அதுவும் குறியாயிற்று. இமைத்தல், மக்கள் விழிக்கியல்பு; இமையா நாட்டம் அமரர்க்கமையும். ஆதலினதுவும் குறியாயிற்று. அச்சம், புதுமையிற் பிறக்கும் உளநடுக்கும், அதன் புறக்குறியும் ஆம். அதுவும் அமரர்பாலறியப்படாமையின், மக்கட்குறியாயிற்று. இனி, “அன்ன பிறவும்” என்றது, அடிநிலந்தோய்தல், வியர்த்தல், நிழலாடுல், போல்வன மாந்தர்க்கன்றித் தேவர்க்கின்மையின், அவையும் மக்களியலுக்கு அறிகுறியாகும்.

1. “மாலை வாடின, வாட்கண் இமைத்தன,
 காலும் பூமியைத் தோய்ந்தன, காரிகை
 பாலின் தீஞ்சொற் பதுமையிந் நின்றவள்
 சோலை வேய்மருள் சூழ்வளைத் தோளியே”
 (சிந்தா. 1334)
2. “திருநுதல் வேரரும்பும், தேங்கோதை வாடும்,
 இருநிலம் சேவடியும் தோயும் அரிபரந்த
 போகித ழுண்கணு மிமைக்கும்,
 ஆகு மற்றிவ ளகலிடத் தணங்கே”
 (புறப்பொருள் வெண்பாமாலை கைக்கிளை. 3)
3.“பாயும் விடையரன் தில்லையன்னாள் படைக்கண் ணிமைக்கும்
 தோயும் நிலத்தடி, தூமலர் வாடும், துயர மெய்தி
 ஆயு மனனே! அணங்கல்லள், அம்மா முலைசுமந்து
 தேயு மருங்கற் பெரும்பணைத் தோளிச் சிறுநுதலே. ”
 (திருக்கோவை. செய். 3)
சூத்திரம் : 5 
 நாட்ட மிரண்டும் அறிவுடம் படுத்தற்குக்
கூட்டி உரைக்கும் குறிப்புரை யாகும்