தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 445 |
இதற்குப் பேராசிரியர், நச்சினார்க்கினியர், இளம்பூரணராகிய மூவரும் ஒன்றோடொன் றொவ்வாத மூன்று உரைகள் எழுதுகிறார்கள். முரணுடைய மூன்றுரைகளும் பொருந்துமாறு கருதி ஆசிரியர் ஒரு சூத்திர மமைத்திருக்கமாட்டார். ஆகவே இதன் மெய்ப்பொருள் காணமுயலுதல் முறையாகும். இவற்றுள் பேராசிரியர் கூறும் உரையாவது: “ஒத்தாழிசைக் கலியின்கண்ணும் மண்டிலயாப்பின்கண்ணும் குட்டம் வருங்கால், அளவடிக்குப் பொருந்திவரும் தத்தம் பாக்கள்”. இச்சூத்திரத்துக்கு இவ்வாறு பொருள் கொள்ளுதலில்வரும் முரண்பாடுகளுக்குச் சமாதானம் காணலரிது. (i) முதலில், ‘ஒத்தாழிசை’, ‘மண்டிலம்’, ‘குட்டம்’ என்ற மூன்றனோடும் ஆசிரியர் தனித்தனியே எண்ணும்மை கொடுத்து, ஓராங்கே இம்மூன்றும் ‘நேரடிக் கொட்டின’ என ஒருபடியாகக் கூறுவதால், இவை தம்முள் ஒத்து நேரடிக்குப் பொருந்தும் என்பதே ஆசிரியர் கருத்தாகும். இதற்கு மாறாக, இவற்றுள் ‘குட்டத்தை’ மட்டும் வேறுபிரித்து, “அஃது ‘ஒத்தாழிசை, மண்டிலயாப்பு’ எனுமிரண்டின்கண்ணும் வருங்கால்” என்றுரைப்பது எப்படிப் பொருந்தும்?குட்டத்தோடு ஆசிரியர் கூட்டிவைத்த உம்மையை வாளா உண்டு விழுங்கி ஒழிப்பது முறையா?அன்றியும், ஒத்தாழிசை, மண்டிலயாப்பு என்ற இரண்டும் குட்டத்தோடு ஒரு நிலையவாய்க் கூட்டி எண்ணப்பட்டு, எல்லாம் எழுவாயாக ‘ஒட்டின’ எனும் பயனிலை கொள்ளநிற்கவும், பேராசிரியர் முதலிரண்டையும் ஏழாம் வேற்றுமையாக்கி, இறுதிநின்ற குட்டத்தைமட்டும் எழுவாய்ப் பொருளதாக் கொண்டு அவ்வெழுவாய்க்குச் சூத்திரத்தில் எங்குமில்லாத ‘வருங்கால்’ எனு முடியாததோர் எச்சப்பயனிலை படைத்துக் கூட்டுதற்கவசியமும் ஆதாரமும் காட்டி விளக்கினாரில்லை. இன்னும் ‘ஒட்டின’ என்னும் பன்மைவினை, எண்ணும்மைகளா லிணைக்கப்பெற்ற ஒத்தாழிசை மண்டிலயாப்பு குட்டம் என்ற மூன்று எழுவாய்ச் சொற்களுக்கும் ஒத்த ஒரு பொதுப் பயனிலையாகப் பொருந்தி நிற்பவும், முன்னிரண்டை ஏழாம் வேற்றுமை யுருபுதந்து விலக்கிவிட்டு, அவ்விரண்டின் கண்ணும் குட்டம்வரின் அக்குட்டம் நேரடிக் கொட்டும் என ஒருமை எழுவாய்க்குப் பன்மைப் பயனிலை காட்டுவது |