தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 447 |
பாவகைகளையும் கூறி, அவற்றோடு அப்பாக்களில் அருகி வந்தமையுமொரு சீர்குறைந்த அடிவிசேடத்தையும் உடனொருங்கு நிறுத்திக் கூறுதற்கு எவ்வகை அமைவும் முறையும் இன்றியமையாமையும் காணலரிது. ஆகவே அக்கருத்தால் ஆசிரியர் சூத்திரம் யாத்திருக்க மாட்டாரென்ப தொருதலை. (v) அன்றியும், ஆசிரியமும் கலியும் நேரடியையேயன்றி அளவு குறைந்த அடிகளையுங் கொண்டு வருதலுண்டு என்று ஆசிரியர் முன்னரே பாக்களினடி பற்றிக் கூறும் உரிய இடத்தில் தக்க தனிச் சூத்திரங்களால் விளக்கிவிட்ட பிறகு மீட்டும் அச்செய்தியை இங்கு வறிதே மிகைபடக் கூறாரன்றோ?‘ஈற்றயலடி’ ‘இடையும் வரையார்’ என்ற செய்யுளியல் 68, 69ஆவது சூத்திரங்களில் ஆசிரியத்துக்கும், ‘முச்சீர் முரற்கை’ என்ற இவ்வியல் 70ஆவது சூத்திரத்தில் கலிப்பாவிற்கும் குறைந்த அடிகள் வந்தமையுமென விளக்கப்பட்டுள்ளது. ஆகவே இச்சூத்திரம் முன் கூறியதையே மீண்டுங் கூறவந்ததெனின், மிகையால் ஆசிரியர்க்குப் பிழைப்பூட்டும், அதனாலுமிப் பொருளிதற்குப் பொருந்தாமை யறியப்படும். (vi) இன்னும், இங்கு மண்டில மென்பது ஆசிரியமென்றுரைகாரர் கூறுவது சரியானால், இதற்குப் பின்வரும் “மண்டிலம் குட்டம் என்றிவை யிரண்டும் செந்தூக்கியல. . . . . ” எனும் சூத்திரம் நகைத்தற்கிடனாம். ‘ஆசிரியமும் குட்டமும் ஆசிரிய இயல’ என ஆசிரியர் ஓர் இலக்கணம் கூறுவரா? எனவே ‘மண்டில யாப்பு’ என்பதால் ஆசிரியமல்லாத பிறிதொன்றையே ஆசிரியர் இங்குக் கூறக் கருதினார் என்பது தெளியக்கிடக்கிறது. (vii) மேலும், ஆசிரிய முதலிய பாவகைகள் பற்றி முன் பலபட விளக்கி முடித்து, இச்சூத்திரமுதல் பின் ‘கூற்று மாற்றமும்’ என்னும் இச்செய்யுளியல் 156ஆவது சூத்திரம் வரை முறையே கலியிலக்கணம் கூறுவதால், இச்சூத்திரத்தில் கலியோடு ஆசிரியத்தை மீட்டு மிழுத்துக் காட்டிக் கூறக் காரணமில்லை. இச்சூத்திரம் கலியிலக்கணம் கூற எழுந்ததென்னாமல், ‘பாவிலக்கணமே கூறுகின்றது’ என்று உரைத் தொடக்கத்தில் பேராசிரியர் காட்டியதும், தாமிதற்குக் கொண்ட பொருளுக்குப் பாருந்த வேண்டிப் புனைந்து கூறியதன்றி வேறில்லை. எனவே இங்கு இனைய பலதடை முரண்களுக்கிடமான இவ்வுரை பொருந்தாமை தெளிதலெளிது. |