1

1. மருதம் ( 1 )
(
) வேட்கைப் பத்து


1. வாழி யாதன் வாழி யவினி
  நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
  எனவேட் டோளே யாயே யாமே
  நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்
  யாண ரூரன் வாழ்க
  பாணனும் வாழ்க 1வெனவேட் டேமே.


  
என்பது புறத்தொழுக்கத்திலே நெடுநாளொழுகி, ‘இதுதகாது' எனத்
தெளிந்த மனத்தனாய் மீண்டு தலைவியோடுகூடி ஒழுகா நின்ற தலைமகன்
தோழியோடு சொல்லாடி, ‘யான் அவ்வாறொழுக நீயிர் நினைத்த திறம்
யாது? என்றாற்கு அவள் சொல்லியது.

  (பழையவுரை) ‘காவற்பொருட்டு அரசன் வாழ்க; விருந்தாற்றுதற்
பொருட்டு நெற்பல பொலிக; இரவலர்க்கு ஈதற்பொருட்டுப் பொன் மிக
உண்டாகுக' என யாய் இல்லத்திற்கு வேண்டுவன விரும்பி ஒழுகியதல்லது
பிறிது நினைத்திலள்; அவள் இத்தன்மையளாக; நீ ஒழுகிய ஓழுக்கத்தால்
நினக்கும் நின்னொழுக்கத்திற்குத் துணையாகிய பாணனுக்கும் தீங்கு
வருமென்றஞ்சி, ‘யாண ரூரன் வாழ்க, பாணனும் வாழ்க' என விரும்பினேம்
யாங்களென்றவாறு.

  தலைவியை யாயென்றது புலத்தற்குக் காரணமாயின் உளவாகவும் அவை
மனங்கொள்ளாத சிறப்பை நோக்கி, தோழி யாங்களென உளப்படுத்தது
ஆயத்தாரை நோக்கி யெனக் கொள்க. பூவும் புலாலும் ஒக்க விளையும்
ஊரனென்றது குலமகளிரைப் போலப் பொது மகளிரையும் ஒப்பக்
கொண்டொழுகுவானென்பதாம். ஆதனவினி யென்பான் சேரமான்களிற்
பாட்டுடைத் தலைமகன்.

   குறிப்பு . சிறக்க-மிகுக, நெல்லையும் பொன்னையும் சேர்த்துக் கூறுதல்
மரபு : புறநா. 384 : 11; பெருங.் 1. 37 : 196; சீவக. 259, 2150.
வேட்டோள்-விரும்பினாள், யாய் - (இங்கே) தலைவி ; குறுந், 9 : 1,10 : 1.
‘தலைவியை யாயென்றது எதிர்ப்பட்ட ஞான்றே கற்புப்பூண்டொழுகுகின்ற
சிறப்பை நோக்கி' (ஐங்.6, உரை). நனைய காஞ்சி - அரும்புகளையுடைய
காஞ்சிமரம். சினைய-முட்டைகளையுடைய, பூவும் புலாலும் ; ஐங். 10 : 4:
புறநா. 396; 1-2, யாணர்-புது வருவாய், ஊரன் : மருத நிலத் தலைவன்.

  சொல்லாடி - பேசி, திறம் - வகை, உளப்படுத்தது - சேர்த்துக் கொண்டது,
பொது மகளிர் - பரத்தையர்.

  (மேற்.) அடி 1 வாழ்த்தல் என்னும் மெய்ப்பாடு வந்தது; தொல் மெய்ப்,
12, இளம். (பி-ம்) 1 முதல் 10 1‘வெனவேட் டோமே' ( 1 )