202

3. குறிஞ்சி

(21) அன்னாய்வாழிப் பத்து


202. அன்னாய் வாழிவேண் டன்னை நம்மூர்ப்
    பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும்
    குடுமித் தலைய மன்ற
    நெடுமலை நாட னூர்ந்த மாவே.

  எ-து தலைமகன் வரைதல் வேண்டித் தானே வருகின்றமை
கண்ட தோழி உவந்தவுள்ளத்தளாய்த் தலைமகட்குக் காட்டிச்
சொல்லியது.

  குறிப்பு. பார்ப்பனக்குறுமகப்போல-அந்தணச் சிறுமகனைப்
போல. குடுமித்தலைய-குடுமியைத் தலையிலுடையன. குதிரைக்
குடுமிக்குப் பார்ப்பனச் சிறுமகன்குடுமி உவமை; புறநா. 273 : 3,
310 : 7-8. மா-குதிரை, மா குடுமித்தலைய.
  (மேற்.) மு. தோழி தலைவியை அன்னாயென்றல் (தொல்.
பொருள். 52, ந.)         ( 2 )