274

3. குறிஞ்சி

(28) குரக்குப் பத்து


274. மந்திக் கணவன் கல்லாக் கடுவன்
   ஒண்கேழ் வயப்புலி குழுமலின் விரைந்துடன்
   குன்றுய ரடுக்கங் கொள்ளு நாடன்
   சென்றனன் வாழி தோழியென்
   மென்றோட் கவினும் பாயலுங் கொண்டே.

   எ-து வரைவிடைவைத்துப் பிரிந்துழி ஆற்றுவிக்கும் தோழிக்குத்
தலைமகள் சொல்லியது.

  (ப-ரை.) மந்திக் கணவனாகிய கல்லாக்கடுவன் புலிமுழக்கிற்கு
அஞ்சி வரையகத்துப் பாயும் நாடனென்றது நமக்கு உரியனா
யொழுகுகின்றவன் யாம் எம்மைப்பாதுகாத்துரைக்கின்ற உரைக்கு
அஞ்சிச் சென்றானென்பதாம்.

  குறிப்பு. மந்தியின் கணவனாகிய கடுவன் : கடுவன்-ஆண்
குரங்கு கல்லாக் கடுவன் : கலித். 40 : 15. புலி குழுமலின்-புலி
முழங்குதலின். புலி குழுமுதல் : ஐங். 218 : 3-4, குறிப்பு. விரைந்து-
அஞ்சி ஓடி. கொள்ளும்-பாய்ந்து பற்றிக் கொள்ளும். பாயல்-
தூக்கம். தோழி, நாடன் என் கவினையும் பாயலையும் கொண்டு
சென்றனன். ( 4 )