278

3. குறிஞ்சி

(28) குரக்குப் பத்து


278. சிலம்பின் வெதிரத்துக் கண்விடு 1கழைக்கோல்
   குரங்கின் வன்பறழ் பாய்ந்தென விலஞ்சி
   மீனெறி தூண்டிலி னிவக்கு நாடன்
   உற்றோர் மறவா நோய்தந்து
   கண்டோர் தண்டா நலங்கொண் டனனே.

   எ-து வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாகத்
தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

  (ப-ரை.) குரங்கு தன்மேலிருந்துழி வளைந்து அது பாய்ந்து
போவுழி நிமிர்கின்ற மூங்கிற்கோல் மீனெறி தூண்டில்போல ஓங்கும்
நாடனென்றது தன்னெஞ்சத்து அன்புளதாகிய காலத்து வளைத்து
வளைத்தொழுகி அன்பற்ற காலத்துப் பணிவின்றித் தலைமைசெய்து
நம் நலங்கொண்ட தன் கொடுமை தோன்ற ஒழுகுகின்றானென்ப
தாம்.

    குறிப்பு. வெதிரத்து-மூங்கிலில். கழைக்கோல்-மூங்கிற்கிளை;
ஐங். 280 : 2. பறழ்-குட்டி. பாய்ந்தென-பாய. இலஞ்சி-குளத்தின்
கண். நிவக்கும்-ஓங்கும். மீனெறி தூண்டில் மூங்கிலுக்கு : குறுந்.
54 : 4. உற்று-அடைந்து. தண்டா-அமையாத, நாடன் நோய்
தந்து நலத்தைக் கொண்டனன்.

   (பி-ம்) 1 ‘கனைக்கோல்?, ‘கணைக்கோல்? ( 8 )