283

3. குறிஞ்சி

(29) கிள்ளைப் பத்து


283. வன்கட் கானவன் மென்சொன் மடமகள்
    புன்புல மயக்கத் துழுத வேனற்
    பைம்புறச் சிறுகிளி கடியு 1நாட
    பெரிய கூறி நீப்பினும்
    பொய்வலைப் படூஉம் பெண்டுதவப் பலவே.

   எ-து தோழி வாயில் மறுக்கவும் தலைமகன் ஆற்றாமைகண்டு
தலைமகள் வாயில்நேர அவன் பள்ளியிடத்தானாய் இருந்துழிப்
புக்க தோழி கூறியது.

  (ப-ரை.) தினைப்புனத்துப் பலவாய்ப்படிகின்ற கிளிகளை ஒருத்தி
தன்னாற்காக்க முடியாதாயினும் அவற்றை அவள் கடிய முயலுநாட
வென்றது நின்னோடு இன்பநுகர்ச்சி விரும்புமகளிரை யாங்கள்
விலக்க முயல்கின்றது முடியாதென்பதாம். ‘பெரிய கூறி நீப்பினும்
பொய் வலைப்படூஉம் பெண்டு தவப்பலவே? என்றது தம் தமரா
யுள்ளார் நின்குறை பலவும் கூறி நீப்பினும் நின்பொய் வலைப்படூஉம்
பெண்டிர் பலர். எ-று. இவளும் அவருள் ஒருத்தியென்பதாம்.

   குறிப்பு. வன்கண்-அஞ்சாமை, கானவனுடைய மடமகள்.
புன்புல மயக்கத்து-புன்செய்க் கலப்பில்; ஐங். 260 :4. ஏனல்-
தினையினின்றும். பைம்புறச் சிறுகிளி-பசுமையான புறத்தையுடைய
சிறிய கிளியை. கடியும்-ஓப்பும். பெரிய கூறி-நின்குறை பலகூறி.
நீப்பினும்-நீங்கினும், பெண்டு-பெண்டிர்; ஐங். 57 : 4. தவப்பல-
மிகப் பலர்.

   (மேற்). மு. தலைவன் ஆற்றாமை வாயிலாகப் புணர்ந்துழிப்
பள்ளியிடத்துச் சென்ற தோழி கூறியது ; திணைமயக்குறுதலுள் இது
குறிஞ்சிக்கண் மருதம் (தொல். அகத். 12, ந.). (பி-ம்.) 1 ‘நாடன்? ( 3 )