321

4 பாலை

(33) இடைச்சுரப் பத்து


321. உலறுதலைப் பருந்தி னுளிவாய்ப் பேடை
   அலறுதலை யோமை யங்கவட் டேறிப்
   புலம்பு கொள விளிக்கு நிலங்காய் கானத்து
   மொழிபெயர் பன்மலை யிறப்பினும்
   ஒழிதல் செல்லா தொண்டொடி குணனே.

      எ-து பிரிந்து போகா நின்ற தலைமகன் இடைச்சுரத்துத் தலை
மகள் குணம் நினைந்து இரங்கிச் சொல்லியது.

  (ப-ரை) ‘மொழிபெயர் பன்மலை யிறப்பினும்’ என்றது
பின்னும் செல்லும் வழியை நோக்கி (எ-று).

   குறிப்பு. உலறு தலைப் பருந்து - காய்ந்த தலையினை யுடைய
பருந்தினது. உளிவாய்ப் பேடை - உளிபோன்ற வாயையுடைய
பெண் பருந்து; உளி யன்ன வாய் : பெருங். 1. 55 : 20-21.
அலறுதலை யோமை - விரிந்த தலையையுடைய ஓமை மரத்தினது;
சிலப். 11 ; 75; அலறுதல் - காய்தலுமாம். அம் கவட்டு - அழகிய
கிளையில். ஓமை மேல் பறவை இருத்தல் : குறுந். 79 : 2-4, 207 :
2-3 புலம்பு - துன்பம். விளிக்கும் - கத்துகின்ற. மொழிபெயர்
பன்மலை - மொழி வேறுப்பட்ட மக்கள் வாழும் பல மலைகளை;
“மொழிபெயர் தேஎத்த ராயினும்” (குறுந். 11:7). ஒண்டொடி;
தலைவியினது. குணன் ஒழிதல் செல்லாது.