382

4 பாலை

(39) உடன் போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து


382. புள்ளொலிக் கமர்த்த கண்ணள் வெள்வேல்
    திருந்துகழற் காளையொ டருஞ்சுரங் கழிவோள்
    எல்லிடை யசைந்த கல்லென் சீறூர்ப்
    புனையிழை மகளிர்ப் பயந்த
    மனைகெழு பெண்டிர்க்கு நோவுமார் பெரிதே.

   எ-து தலைமகள் இடைச்சுரத்தினது ஊரின்கண் எல்லிடைத்
தங்கிய வழி அவ்வூர்ப்பெண்டிர் பார்த்து இரங்குதல் கண்டார்
சொல்லியது.

   குறிப்பு. புள்ளொலிக்கு அமர்த்த கண்ணள்: பறவைகளின்
ஓசைக்கு வெருவும் இயல்பினாள் என்றபடி. எல்லிடை - பகலில்.
அசைந்த - தங்கிய. கல்லென்சீறூர்-கல்லென்ற ஒலியையுடைய
சிறிய ஊரிலுள்ள. பயந்த - பெற்ற மார்: அசைச்சொல். நோவு
பெரிது. ( 2 )