5. முல்லை
(41) செவிலிகூற்றுப் பத்து
402. புதல்வற் கவைஇய தாய்புற முயங்கி நசையினன் வதிந்த கிடக்கை பாணர் நரம்புளர் முரற்கை போல இனிதா லம்ம பண்புமா ருடைத்தே.
குறிப்பு. புதல்வற் கவைஇய-புதல்வனைத் தழுவிய. தாய்புறம்-தாயினது முதுகை. நசையினன்-விருப்பமுள்ளவனாக. வதிந்த-தங்கிய. முரற்கை-துள்ளலோசை: ஐங். 407 : 2; மலைபடு. 390. கிடக்கை இனிது, பண்பும் உடைத்து; ஆல், மார் : அசைநிலைகள். மு. ஒப்பு. குறுந். 359.