411

5. முல்லை

(42) கிழவன் பருவம்பாராட்டுப் பத்து


411. ஆர்குர லெழிலி யழிதுளி சிதறிக்
   கார்தொடங் கின்றாற் காமர் புறவே
   வீழ்தரு புதுப்புன லாடுகம்
   தாழிருங் கூந்தல் வம்மதி விரைந்தே.

   எ-து பருவங்குறித்துப் பிரிந்த தலைமகன் அப்பருவத்திற்கு
முன்னே வந்து தலைவியொடு கூடிச் செல்லாநின்றுழிப் பருவம்
வந்ததாகத் தான் பருவத்திற்குமுன்னே வந்தமை தோன்றக் கூறு
வான் தலைவிக்கு உரைத்தது.

    குறிப்பு. எழிலி-மேகம். கார் தொடங்கின்று : ஐங். 413 : 3.
காமர் புறவே-அழகிய முல்லை நிலத்தின்கண். ஆடுகம்-ஆடு
வோம். கூந்தல் : விளி. வம்மதி-வருவாயாக. விரைந்து வம்மதி. ( 1 )