91

(10) எருமைப்பத்து

 


91. நெறிமருப் பெருமை நீல விரும்போத்து
  வெறிமலர்ப் பொய்கை யாம்பன் மயக்கும்
  கழனி யூரன் மகளிவள்
  1பழனி வெதிரின் கொடிப்பிணை யலளே.

 எ-து குறைவேண்டிப் பின்னின்றுவந்த தலைமகற்குத் தோழி,
‘இவள் இளையள் விளைவிலள்’ எனச் சேட்படுத்தது.

 (ப-ரை.) நாற்றங்கொள்ளப்படாத கரும்பின் பூவாற் செய்யப்பட்ட
நெடிய மாலையையுடையளென்பதனாற் பேதையென்றவாறு அறிக.
எருமைப்போத்து வெறிமலர்ப் பொய்கை ஆம்பன் மயக்கும் ஊர்
என்றது நல்ல தன்மையை ஆராய்ந்து கெடுக்குமூராதலால் நினக்கு
ஈண்டுவருதல் பொருந்தாதென்பதாம். பழனவெதிரென்பது கரும்பு.

 குறிப்பு. நெறிமருப்பு எருமை - நெறிந்த கொம்பையுடைய
எருமை; பதிற். 67 : 15 ; சீவக. 44. எருமைப்போத்து - எருமைக்கடா.
வெறி - வாசனை. மயக்கம் - கெடுக்கும்; ஐங். 99 : 2. ஊரன் - ஊரனது.
பழன வெதிரின் கொடிப்பிணையலள் - கரும்பின் மணமில்லாத
பூமாலையை யணிந்தவள்; குறுந். 85 : 4-5 ; நாலடி. 199.

 (மேற்.) ‘திணை மயக்குறுதலுள் மருதத்துக் குறிஞ்சி நிகழ்ந்தது;
இஃது இளையள் விளைவிலள் என்றது ‘ (தொல். அகத். 12. ந.)

  (பி-ம்.) 1 ‘பழநல் வெதிரின்’ ( 1 )